மதுரை அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் கோவிலில் முதல் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் திமுக கிளை செயலாளர் உள்ளிட்ட 6 பேர் கைது.
மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் வசித்து வரும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கடந்த 2001 - 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தார்.
பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலின் உற்சவ விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்று முன்தினம் முடிவடைந்தது. கோவிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேல்முருகன் தரப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்த வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்க தொடங்கி வீட்டின் ஜன்னல்களையும், டீவி, ப்ரிட்ஜ், பைக், கார்களை உடைத்தனர்.
தொடர்ச்சியாக பொன்னம்பலத்தின் காரை பெட்ரோல் ஊற்றி எறித்ததோடு, அருகில் இருந்த வீடுகளையும் கற்களால் எறிந்து உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பொன்னம்பலத்தின் உறவினரான விஜய் என்பவருக்கு அரிவாளால் வெட்டப்பட்டதில் வயிற்றில் படுகாயம் ஏற்பட்டதோடு கல்வீச்சில் பழனிக்குமார். வேல்விழி, சுப்பையா ஆகிய 4 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மற்றொரு தரப்பான வேல்முருகன் தரப்பில் திருப்பதி என்பவருக்கும் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவில் விழாவில் மரியாதை அளிப்பதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கார் எரிப்பு, வீடுகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சத்திரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதனடிப்படையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பில் திருப்பதி என்பவர் அளித்த புகாரின் கீழ் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்பம்பலம் உட்பட 20 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3 பேரை சத்திரபட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோன்று இந்த மோதல் தொடர்பாக கருவனூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார் என்பவர் அளித்த புகாரின் கீழ் கொலை முயற்சி உள்ளிட்ட 9 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கருவனூரை சேர்ந்த வேல்முருகன் , திருப்பதி உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜமோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.