அ.தி.மு.க., கள ஆய்வுக் கூட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்


அ.தி.மு.க.,வின் கிளை, வார்டு, வட்டகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய கள ஆய்வுக் குழு ஒன்றை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  நியமித்தார்.  இந்தக் குழுவில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ,செம்மலை, அ.அருணாச்சலம், பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


அதிமுக நிர்வாகிகள் முன் ஏற்படும் பிரச்னை


இதையடுத்து கடந்த 11-ஆம் தேதி நியமிக்கப்பட்ட குழு சார்பாக, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நியமிக்கப்பட்ட தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கள ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை, கும்பகோணம் கள ஆய்வுக் கூட்டத்தில் மோதல் வெடித்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலு மணி தலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற பிரச்னையால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மதுரையில் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மதுரையில் உள்ள மத்திய தொகுதி, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு என நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டு அடிதடியானது, பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


- Southern Railway: ரயில் பயணிகள் கவனத்திற்கு... இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


மதுரையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டம்


அ.தி.மு.க., மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே.ராஜூ ஏற்பாட்டில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனைப்படி மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் கள ஆய்வுக்கூட்டம் மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்றது. கள ஆய்வு குழு நிர்வாகிகள் முன்னிலையில் துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செம்மலை நிலையில் நடைபெற்று வருகிறது. இந்த கள ஆய்வு கூட்டத்தில் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் என ஆயிரத்து மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், இதில் ஒரு சில அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பு அதிமுக நிர்வாகிகளை மற்றொரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது கருத்துக்களை பேச அனுமதிக்கவில்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.


அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற அடிதடியால் பரபரப்பு


முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, அமைச்சர் செம்மலை ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கும் போது, மேடைக்கு வந்த அ.தி.மு.க., தொண்டர் ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரை சமரசம் செய்ய வந்த அதிமுக நிர்வாகிகளுடன் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டால்  கள ஆய்வு கூட்ட மேடையிலே கைகலப்பு ஏற்பட்டது.  கடும் சண்டை ஏற்பட்டது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட விவகாரம் தமிழக அளவில் அ.தி.மு.க.,வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செல்லூர் ராஜூ - டாக்டர் சரவணன் தரப்பு மோதல்


பிரச்னை குறித்து கட்சி நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம் அவர்கள் கூறுகையில், "கூட்டத்தில் ஒரு சில அதிமுக நிர்வாகிகள் தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என, பைக்கார பகுதியை சேர்ந்த செழியன், முனிச்சாலை சரவணன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னாள் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே போல் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தரப்பினருக்கும் அதே போல் டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இரு தரப்பிற்கும் இடையே அரசியல் போட்டி நிலவிவருகிறது. செல்லூர் ராஜூ கடந்த எம்.பி தேர்தல் முதலே சரவணனுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செல்லூர் ராஜூ, டாக்டர் சரவணன் மதுரையில் அதிமுகவில் வளர்ச்சியை எட்டக் கூடாது என நினைக்கிறார். செல்லூர் ராஜூவை மிஞ்சி அரசியல் செய்ய வேண்டும் என டாக்டர் சரவணன் நினைக்கிறார். இதனால் இரு தரப்புக்கும் இடையில் மறைமுக அரசியல் நடந்துவருகிறது. இந்த பிரச்னை மூலம் இரு தரப்புக்கும் இடையே உள்ள அரசியல் வெளிப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.



மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி, மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்