விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நான்.  முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும் ,எனது மகன்கள் மற்றும் ஓட்டுனரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்  இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமின் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிப்பதால், இந்த வழக்கை ஜனவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.





பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீதான வழக்கு ரத்து







திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த முஹம்மது உமர் அப்துல்லா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாங்கள் கடந்த 2020ல் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பிற்கு கண்டனம் தெரிவித்து ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஏர்வாடி காவல்நிலையத்தில் எங்கள் மீது சட்டவிரோதமாக கூடியதாகவும், பொது இடைவேளி இல்லாமலும், கொரோனா நோய்த்தொற்றை மற்றவர்களுக்கு பரப்பும் விதமாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143,283,270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் விசாரணை எனும் பெயரில் தொடர்ச்சியாக தொல்லை செய்கின்றனர். ஆகவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "போராட்டம் என்பது ஜனநாயகம் உரிமை. இஸ்லாமியர்களின் புனித தலமான பாபர் மசூதி இடிப்பு என்பது  இஸ்லாமியர்களால், மறக்க முடியாத நிகழ்வு. இந்த செயலை கண்டித்து ஜனநாயக முறையில் போராடி உள்ளனர். போராட்டத்தின்போது எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை. போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. எனவே ஏர்வாடி போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதான வழக்கும் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.