மதுரை மாவட்டம் அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர்  திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பிரம்மோற்சவ பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி திருவிழாவை காண பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி கட்டி வருவது சிறப்பாக இருக்கும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோவிலில். கடந்த 4ம் தேதி  "கோவிந்தா, நமோ நாராயணா" என்ற பக்தி கோஷத்துடன் ஆடிப் பெருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. 






 

தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அன்னம் பூத வாகனம் ரிஷப வாகனம் கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் கோயில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவாக திருத்தேரோட்டம் நடைபெறும். இதனை ஒட்டி இன்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் திருத்தேரில் கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து காலை 6:30 மணி முதல் கோவிந்தா கோஷமுழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இந்த திருவிழாவில் சிவகங்கை திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். 



 

லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே தேர் ஆடி அசைந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. நான்கு மாடவீதிகளில் வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து கள்ளழகர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்த பின்னர் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய 18-ஆம் படி கருப்பண்ணசாமிக்கு பூஜை செய்து கிடா வெட்டுதல், மொட்டை அடித்தல் பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவர். தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய திருவிழாவாக இந்த திருவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  108 வைணவ திருத்தலங்களில் ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற மிக முக்கிய திருத்தலம் என பெயர் பெற்றுள்ளது. பாண்டிய நாட்டு வைணவ திருத்தலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள திருத்தலம் இதுவாகும். 



இந்த அழகர் மலை உச்சியில் முருகனின் 6-வது படை வீடான பழமுதிர்சோலை அமைந்துள்ளது. அதனை அடுத்து சிலம்பாறு எனும் நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. அழகர்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலை உச்சியின் மீதுள்ள இந்த சிலம்பாறு தீர்த்தத்தில் நீராடி விட்டு அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு போய் தங்களது இல்லங்களுக்கு சென்று அதை இல்லங்களிலும் தெளிப்பார் அதேபோல் வயல் வெளிகளிலும் தெளித்து தங்களது விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவ்வாறு மேற்கொள்வதன் மூலம் தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.  இன்று நடைபெறக்கூடிய இந்த தேரோட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேரோட்டம் நடைபெறாமல் அதற்கு உரிய பரிகார பூஜைகள் மட்டுமே கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்ததை அடுத்து தேரோட்டம் நடைபெற்றுள்ளது.



மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் .தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளதால் இப்பகுதியே மனித தலைகளாக காட்சியளித்து வருகிறது.