கடந்த வாரம் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாணர்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி அரசு ஊழியார்கள் குறித்தும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் முன் ஜாமின் கோரியுள்ளார் கஸ்தூரி.







 

கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு:


 

நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களை இழிவுபடுத்தியதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மறுநாளே செய்தியாளர்களை சந்தித்து தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். இருப்பினும் இந்த விவகாரம் அவருக்கு சிக்கலாக மாறியதால், இறுதியில் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தார். மற்றொரு பக்கம் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. 

 


 

தலைமறைவான கஸ்தூரி?


அந்த வகையில் அகில இந்திய தெலுங்கு சம்மேளம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு சம்மன் வழங்க சென்ற போது வீடு பூட்டுப் போடப்பட்டிருந்ததாக சொல்கின்றனர். அதனால் போலீசார்  அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் கொண்டு வந்தவ்சம்மனை அவரது வீட்டில் ஒட்டிச்சென்றனர். மேலும் நடிகை கஸ்தூரி போலீசாருக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் நடிகை கஸ்தூரியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்நிலையில் தான் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 


முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்


மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த புகாரில், முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வர உள்ளது.