சாய் பல்லவி
அமரன் திரைப்படம் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடித்த தியா , ஷியாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றன. அதே நேரம் தமிழில் மாரி 2 , கார்கி , உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்தன. தற்போது அமரன் திரைப்படம் சாய் பல்லவியின் கரியரில் மீண்டும் ஒரு முக்கியமான படமாக அமைந்துள்ளது. அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சாய் பல்லவி மீது மொத்த ஊடக கவனமும் திரும்பியுள்ளது. இதனை பயண்படுத்திக் கொண்டு அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்கள் தயாரிப்பாளர்கள். அந்த வகையில் சாய் பல்லவி தற்போது தெலுங்கி நாக சைதன்யாவுடன் நடிக்கும் தண்டெல் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணா படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
ராமாயணா
அமீர் கான் நடித்த தங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி தற்போது இந்திய புராணக் கதையான ராமாயணத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அனிமல் பட நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார். நடிகை சாய் பல்லவி சீதையாகவும், கே.ஜி.எஃப் பட புகழ் யாஷ் ராவணனாக நடிக்கிறார். பாபி தியோல் அனுமன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்துஹ் வருகிறார்கள்.
மிகப்பெரிய பொருட்செலவில் இரண்டு பாகங்களாக பிரம்மாணமாக உருவாகும் ராமாயணா படம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி இப்படத்தில் நடிப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது அமரன் படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்துள்ளார் சாய் பல்லவி.