US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மத்தியில், மக்கள் பிரதிநிதிகளாக வெற்றி பெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் குறித்து விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல்:
கடந்த சில தசாப்தங்களில் நடந்த அமெரிக்க தேர்தல்களில், மிகவும் இழுபறி மிகுந்த தேர்தலாக 2024 அதிபர் தேர்தல் நிலவுகிறது. கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே வெற்றியாளரை நிர்ணயிப்பது மிகவும் கடினமானதாக உள்ளது. இதன் காரணமாக அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாக சில நாட்கள் கூட ஆகலாம், நீதிமன்றங்களை கூட இரண்டு வேட்பாளர்களும் நாடலாம் என கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர். அவர்களில் சிலர் வெற்றியும் ஈட்டி கவனத்தை ஈர்த்துள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர்கள்:
ரோ கண்ணா வெற்றி:
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ரோ கன்னா, புதன்கிழமை கலிபோர்னியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க ஹவுஸ் இருக்கைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு கட்சி வலுவாக உள்ள இந்த மாவட்டத்தில், அந்த கட்சியின் அனிதா சென்-ஐ, கன்னா எளிதில் தோற்கடித்தார். கன்னா முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் தற்போதைய பிரதிநிதி பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அமெரிக்க சபைக்கு தற்போது மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கன்னா ஹவுஸ் ஆயுத சேவைகள் குழு, மேற்பார்வை மற்றும் பொறுப்புக் குழுவில் பணியாற்றுகிறார். சான் பிரான்சிஸ்கோவின் தெற்கே சிலிக்கான் பள்ளத்தாக்கின் சில பகுதிகளை உள்ளடக்கிய இந்த 17வது மாவட்டம், கடந்த 1990 முதல் ஜனநாயக கட்சிக்கு சாதகமாக அமைந்து வருகிறது.
சுஹாஸ் சுப்ரமணியம்:
சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா மற்றும் முழு கிழக்கு கடற்கரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் இந்திய அமெரிக்கர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் கோட்டையான வர்ஜீனியாவின் 10வது காங்கிரஸ் மாவட்டத்திலிருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்ட சுப்ரமணியம், குடியரசுக் கட்சியின் மைக் க்ளான்சியை வீழ்த்தினார். இவர் தற்போது வர்ஜீனியா மாநில செனட்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி குறித்து பேசியுள்ள சுப்ரமணியம், “ வர்ஜீனியாவின் 10வது மாவட்ட மக்கள் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ தனேதர்:
மிச்சிகனின் பதின்மூன்றாவது காங்கிரஸ் மாவட்டத்திலிருந்து அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீ தனேதர், காங்கிரஸ் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தனது குடியரசுக் கட்சியின் போட்டியாளரான மார்டெல் பிவிங்ஸை 35 சதவீத புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ராஜா கிருஷ்ணமூர்த்தி
ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸின் ஏழாவது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து, தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார்.
டாக்டர் அமி பெரா
தொழில் ரீதியாக மருத்துவரான டாக்டர் அமி பெரா, 2013 முதல் கலிபோர்னியாவின் ஆறாவது காங்கிரஸின் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அமெரிக்க வாழ் இந்திய காங்கிரஸ்காரர் ஆவார். அவர் தொடர்ந்து ஏழாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷா, குடியரசுக் கட்சி வேட்பாளரான டேவிட் ஸ்வீகெட்டை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.