தமிழ்நாட்டின் முன்னணி ஹீரோக்களில் இளைய தளபது விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. நடிப்பு, ஸ்டெயில், நடனம் என பன்முக திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் உள்ளங்களை கட்டிப் போட்டுள்ளார். திரை உலகில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து சாதனைகள் பல செய்துள்ளார். இப்படியான மாஸ் ஹீரோ விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் விஜயின் பிறந்தநாளை வெளி மாநிலங்களிலும் கொண்டாடி வருகின்றனர்.
மதுரையில் விஜயின் போஸ்டர்கள் தனித்துவம் பெறும். வெறும் போஸ்டராக இல்லாமல் அதில் அரசியலும் கலந்திருக்கும். ஜெயலலிதா, கலைஞர் மறைவிற்கு பின் விஜய் மிகப்பெரும் மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களின் ஆசை தட்டிப்போகிறது. ஆனாலும் தங்களது போஸ்டரின் வாயிலாக ரசிகர்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது விஜய் ரசிகர்கள் போஸ்டர், பேனர்களில் செலுத்தும் கவனத்தை விட ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை மேலோங்கி முன்னெடுத்து வருவது பாராட்டைப் பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் ரசிகரான தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த நாகராஜன் தமிழ் தனது திருமணத்தை முன்னிட்டு துணைவியார் பாண்டி மீனா மற்றும் விஜய் ரசிகர் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தனது பெற்றோர் மற்றும் பெண் வீட்டார் ஆதரவோடு நலத்திட்ட உதவிகளை வழங்கியது பெரும் பாரட்டுக்களை பெற்றது. இந்த தம்பதியின் திருமணம் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற நிலையில், அந்தப்பகுதியில் சாலையோரத்தில் வசிக்க கூடிய சாட்டையடித்து நாடோடிகளாய் வாழும் குடும்பங்களை சேர்ந்த ஆதரவற்ற மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, மளிகைப்பொருட்கள், பழங்கள், உணவு ஆகியவை அடங்கிய பொருட்களை வழங்கினார்.
மாலையும் கழுத்துமாக திருமணம் முடித்த கையோடு மணக்கோலத்தில் இளம் ஜோடிகள் ஆதரவற்ற பொதுமக்களுக்கு உதவியிருக்கும் இச்செயல் பல தரப்பினரின் பாராட்டை பெற்றது. முன்னதாக அந்தப் பகுதிக்கு நிவாரணப்பொருள் வழங்க வந்த மணப்பெண் மற்றும் மணமகனை ஆரத்தி எடுத்து மேளத்துடன் நடனமாடி அம்மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில் போஸ்டர்களை புறக்கணித்து பல்வேறு எழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றிவரும் விஜய் மன்ற இளைஞர் அணியை சேர்ந்த சுக்காம்பட்டி தினகரன், “கோடான கோடி ரசிகர்களின் இதயங்களில் குடியிருக்கும் இளைய தளபதி விஜய் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறோம். தற்போது தளபதியின் போஸ்டர்கள் அரசியல் சார்ந்த போஸ்டர்களாக மாற்றப்படுகிறது. அவரின் செயல்பாடு தமிழகத்தில் முக்கியத்துவமாக அமையும். இன்று அவரின் பிறந்தநாளை போஸ்டர் மற்றும் பேனர் வழியாக மட்டும் கொண்டாடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக செய்கிறோம். கொரோனா சூழலை கருத்தில் கொண்டு எங்களின் செயல்பாடுகளை மாற்றியுள்ளோம். எங்களைப் போல பிற நண்பர்களும் செயல்பட வேண்டும் என விரும்புகிறோம்.
மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு மளிகை பொருட்களும், காய்கறி தொகுப்பு வழங்கியுள்ளோம். மாவட்ட தலைவர் விஜய் அன்பர் கல்லாணையுடன் இணைந்து பல இடங்களில் சேவைசெய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. ரத்த தான முகாம், தினமும் ஆதரவற்றவர்களுக்கு உணவு, கல்வி உதவி என்று எங்களின் கரம் தொடர்ந்து நீளும்” என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -viruthunagar Update: ‛ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு... அப்பா அம்மா’