கொடைக்கானலில் தொடர்ந்து நீடித்து வரும் ஊரடங்கால் சுற்றுலாப்பயனிகளை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்ககோரி கொடைக்கானல் மக்களையும், சுற்றுலாவையும் காப்பாற்றுங்கள் என பெரும்பாலானோர் பேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைப்பது ட்ரெண்ட் ஆகி வருகின்றது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் வசிக்கும் 70 சதவிகித மக்கள் சுற்றுலாத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தங்கும் விடுதிகள், சுற்றுலா வாடகை வாகனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், படகு ஓட்டுனர்கள், சைக்கிள் சவாரி, குதிரை சவாரி, பழக்கடைகள், தைலக்கடைகள், அலங்காரப்பொருட்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்,இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏப்ரல்,மே மாத சீசன் காலங்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா, மலர்கண்காட்சி ஆகியவை ரத்துசெய்யப்பட்டது . இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் கொடைக்கானலில் வசிக்கும் பொதுமக்களில் பெரும்பாலானோர் சுற்றுலா தொழிலை நம்பி இருந்த நிலையில் சுற்றுலாப்பயணிகளின் வருகையின்றி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கினால் சுற்றுலாத்தொழில் முற்றிலும் முடங்கிவிட்டது. வருமானத்திற்கு வேறு வழியின்றி அன்றாட வாழ்க்கையை நடத்தவே பலரும் அனுதினமும் சிரமப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்து கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாபயணிகளை அனுமதிக்கவேண்டும் என சுற்றுலாபயணிகளை வாழ்வாதாரமாக கொண்டுள்ளோர் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில்,மூன்றாவது முறையாக கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு கொடைக்கானல் மக்களுக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்தமுறை அறிவிக்கப்பட்ட தளர்வில் அத்தியாவசியத் தேவையென்றால் மட்டுமே கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாபயணிகளை கொடைக்கானலுக்கு அனுமதித்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும், இல்லையேல் அரசு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவேண்டும். வாகன கடன், வங்கிக்கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவைகளுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் அரசை வலியுறுத்திவருகின்றனர். மேலும் கொடைக்கானல் மக்களையும், சுற்றுலாவையும் காப்பாற்றுங்கள் (#SaveKodaikanal) என்ற வாசகம் கொண்ட ஹாஸ்டேக் பெரும்பாலான கொடைக்கானல் மக்களின் பேஸ்புக் பக்கத்திலும், தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆகவும் வைப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே 2015ல் இதே போன்று ஒரு முறை கொடைக்கானல் டிரண்ட் செய்யப்பட்டது.
கொடைக்கானல் பிளவர் ஷோ பாக்கணுமா? இதோ அதற்கு ஒரு வழி!
இந்தியன் 2 வேலைக்கு ஆகாது; ரூட்டை மாற்றும் அனிருத் - ஷங்கர் கூட்டணி!