தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



 

குறிப்பாக இந்த புகைப்பட கண்காட்சியில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் சென்னை மேயராக, துணை முதல்வராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் பதவி வகித்த போது செய்த திட்டங்கள், கட்சிப் பணிகள், கட்சி நிகழ்ச்சிகள் தொடர்பான படங்களும் அவர் பேசிய வாசகங்களும் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன.




இந்த புகைப்படக்கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். முன்னதாக புகைப்படக்கண்காட்சியை பார்வையிட வந்த நடிகர் வடிவேலுவை அமைச்சர் மூர்த்தி வரவேற்றார். புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் அவரது சிறுவயது படங்கள் முதல் தற்போது முதல்வராக பொறுப்பேற்று தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் வரையிலான பல்வேறு காலகட்ட புகைப்படங்களை நடிகர் வடிவேலு பார்வையிட்டார்.

 

தொடர்ந்து நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..,” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அருமைத்தலைவர், புகைப்படக்கண்காட்சியை தொடங்கி வைத்தது எனக்கு பெருமை, இங்கே இருப்பது அனைத்தும் படம் இல்லை, எல்லாம் உண்மை, முதல்வரின் படங்களை கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன், வாழ்க்கையில் எல்லாவற்றையும் தாங்கி முதல்வர் ஸ்டாலின்  உயர்ந்துள்ளார். தன்னம்பிக்கை தைரியம் உழைப்பு அவரை உயர்த்தி உள்ளது. ஒவ்வொரு படங்களும் வரலாறை சொல்கிறது. இளைஞர்கள் பெரியவர்கள் அனைவரும் முதல்வரின் வாழ்க்கை வரலாறு புகைப்படத்தை பார்க்க வேண்டும். மிசா காலத்தில் சிறைவாசம் அணிவித்ததை தத்துரூபமாக வைத்துள்ளனர். உயிர்பிழைத்து வந்த உழைப்பாளி, முதலமைச்சரின் வாழ்க்கை பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார், இருந்தாலும் ஸ்டாலினின் கதையில் உதயநிதி ஸ்டாலின் தான் கட்டாயப்படுத்தி நடிக்க வைப்போம்.



அரசியல் வருகை குறித்த கேள்விக்கு,

 

விரைவில் காலம் அதற்கு பதில் சொல்லும் நான் இங்கு அரசியல்வாதியாக வரவில்லை.

 

மேலும்,முதலமைச்சரிடம் பிடித்தது? அவருடைய எளிமை தான்” என்றார்

 

இறுதியாக நிகழ்ச்சியை பார்க்க வந்த கல்லூரி மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.