ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. அவருடைய மகன் அஜய்பாண்டியன் (28). இவர், டிப்ளமோ மெக்கானிக் இன்ஜினீயர் படித்துள்ளார். இவர், திண்டுக்கல் மாவட்டம் மங்களம்கொம்பு பகுதியில் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 31-ந் தேதியன்று ராமநாதபுரம் சத்திரத்தை சேர்ந்த அவருடைய நண்பர் கல்யாணசுந்தரம் (25), அஜய் பாண்டியனை பார்க்க மங்களம்கொம்புக்கு வந்தார்.




இந்தநிலையில் நேற்று ஆடி 18-ம் பெருக்கையொட்டி இவர்கள் 2 பேரும் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு அஜய் பாண்டியன் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் நின்று உற்சாகமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.அதனை, கல்யாணசுந்தரம் செல்போனில் பல்வேறு விதங்களில் படம் பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அஜய்பாண்டியன், நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கி  சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில், திடீரென பாறையில் கால் வழுக்கி அவர் நீர்வீழ்ச்சிக்குள் தவறி விழுந்தார்.




கண்இமைக்கும் நேரத்தில், நீர்வீழ்ச்சியில் மூழ்கிய அவர் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். கண்ணெதிரே தன்னுடைய நண்பர் நீரில் மூழ்கியதை கண்டு, அதிர்ச்சி அடைந்த கல்யாணசுந்தரம் காப்பாற்றுங்கள் என கூறிய நிலையில் யாரும் அங்கு இல்லாத சூழலில், இதனையடுத்து கல்யாணசுந்தரம், புல்லாவெளி பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களிடம் தனது நண்பரை தண்ணீர் இழுத்து சென்று விட்டதாக கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் தாண்டிக்குடி போலீசாருக்கும், ஆத்தூர் தீயணைப்புபடையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்பு மீட்பு பணி அலுவலர்கள் புனிதராஜ், அழகேசன், திண்டுக்கல் தீயணைப்புப்படை நிலைய அலுவலர் மயில் ராசு உள்பட 12 பேர் கொண்ட 2 குழுக்கள் நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீரில் இறங்கி  நேற்று மாலை 4 மணி வரையிலும் தீவிரமாக தேடினர். ஆனால்  நீரில் அடித்து செல்லப்பட்டவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாலை 3 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.




இதற்கிடையே சம்பவ இடத்துக்கு கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். ஆனால் தண்ணீரில் மூழ்கிய அஜய்பாண்டியன் கதி என்ன என்று தெரியவில்லை. இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீர்வீழ்ச்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் அவரை தேட முடியாத சூழலே தொடர்ந்து உள்ளது. இன்று காலை முதல் மீண்டும் அஜய்பாண்டியை தேடும் பணி தொடங்கியுள்ளது.


வீடியோ