திருப்பூர் மாவட்டம் பல்லடம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரகாஸ் கூலித்தொழில் செய்து வரும் இவருக்கு  இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு ஷிவானி (4) என்ற மகள் இருந்தாள். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்துள்ளனர். மல்லிகாவின் உறவினரான திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரும் அவரது மனைவி கீர்த்திகா என்பவரும் அடிக்கடி மல்லிகாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.




கீர்த்திகாவுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கவுரியின் மகள் ஷிவானியுடன் கீர்த்திகா  நெருக்கமாக பழகியுள்ளார். இதற்கிடையே கடந்த மாதம் 20-ந்தேதி மல்லிகாவின் வீட்டிற்கு வழக்கம்போல் கீர்த்திகாவும், அவரது கணவர் ராஜேஷ்குமாரும் வந்துள்ளனர். அப்போது அவர்கள், கவுரியிடம் ஷிவானியை தங்களுடன் ஊருக்கு அழைத்துச்சென்று சிறிது நாள் உடன் வைத்திருந்து  மீண்டும் அனுப்புவதாக கூறியுள்ளனர். அப்போது கீர்த்திகாவுக்கு குழந்தைகள் இல்லாததால் பரிதாபப்பட்ட கவுரி, தனது மகள் ஷிவானியை அவர்களுடன் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.




இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி ஷிவானி வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாக கூறி கீர்த்திகா, அந்த சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு ஷிவானியை டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமியின் உடலில் ஆங்காங்கே தீக்காயங்கள் இருந்தன. இதையடுத்து சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஷிவானி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பிரகாஷ்-கவுரி ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த தனது மகளை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில் ராஜேஷ்குமார் மற்றும் கீர்த்திகாவை தீவிரமாக விசாரித்தனர்.




அப்போது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. அதன்படி, கீர்த்திகா சிறுமி ஷிவானியை தன்னுடன் செங்குளத்துபட்டிக்கு அழைத்து வந்து தனது வீட்டில் வைத்திருந்தார். அப்போது அந்த சிறுமி அடிக்கடி சேட்டைகள் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கீர்த்திகாவும், ராஜேஷ்குமாரும் சேர்ந்து சிறுமி என்றும் பாராமல் ஷிவானியின் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதோடு கடந்த 2-ந்தேதி ஷிவானி வீட்டுக்குள் இயற்கை உபாதை கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கீர்த்திகா, ஷிவானியை பிடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் ஷிவானிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.




அப்போது மயங்கி விழுந்த சிறுமியை கீர்த்திகா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஷிவானி கொண்டு செல்லப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீர்த்திகா தாக்கியதால் சிறுமி உயிரிழந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார், கீர்த்திகாவை கைது செய்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண