அனுமதியின்றி கட்டிடம் கட்டினால் அதை இடிக்க அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.


ஸ்ரீரங்கம் அருகே 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு முறைகேடாகக் கட்டப்பட்டதாகத் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


’அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள்’


மேலும், ”அங்கீகாரமின்றி கட்டிடம் கட்டலாம், பின்னர் அதிலுள்ள குறைபாடுகளை சரி செய்யலாம் என்பதை ஊக்குவிக்கக்க் கூடாது. கட்டிடத்தை ஆய்வு செய்து நிறைவு சான்று பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு தர வேண்டும்” என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.


திருச்சியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்னதாக தாக்கல் செய்த மனுவில், ‘‘திருச்சி  உய்யகொண்டான் திருமலை கிராமத்தில் 51.08 சென்ட் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.


இதற்காக முறையான அனுமதி எதுவும் பெறவில்லை. எனவே, அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை அகற்றவும், இதனை தடுக்கத் தவறிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.


’அனுமதியின்றி கட்டப்பட்ட குடியிருப்பை இடிப்பதே சட்டம்’


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர், ‘‘முறையான அங்கீகாரம் இன்றி கட்டிடம் கட்டலாம். பின்னர் அதில் குறைபாடுகளை சரிசெய்து கொள்ளலாம் என்ற மனநிலையை அரசு அலுவலர்கள் ஊக்குவிக்கக்கூடாது.


அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சட்டம். கட்டிடம் முறையாக கட்டப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து, பணிகள் முடிந்ததற்கான சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், நீர், பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.


நகரத்தின் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனாலும் சட்ட விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது தடையில்லாமல் நடக்கிறது. விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு நீதிமன்றங்கள் ஏற்கெனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.


இந்த வழிகாட்டுதல்களை இந்த வழக்கில் தொடர்புடைய அலுவலர்கள் பின்பற்றவில்லை. எனவே, அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பணி முடிந்ததற்கான சான்று வழங்கிய அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை எடுத்தது தொடர்பான அறிக்கையை இரண்டு வாரங்களில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை நவ. 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


மேலும் படிக்க: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!