மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அனீஷ்சேகர், கூடுதல் ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் பரிசுகளை வென்ற மாணவர்களுக்கு 7 நாட்கள் இலக்கிய பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. விழாவில் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்..,” தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதல்வரும், தமிழ்நாடு அரசும், தமிழ் வளர்ச்சித்துறையும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. தென்பாண்டித் தமிழ் என பெருமைப்படும் இடங்களில் ஒன்றாக மதுரை உள்ளது. 2 ஆயிரம் வருடம் ஆனாலும் கூட, மதுரைக்கு இன்றளவும் தனிச்சிறப்பு உண்டு.



 

தமிழை கற்க கூடிக்கரையும் காகங்களை போல இல்லாமல் கூடிப்பொழியும் மேகங்களை போல இருக்க வேண்டும். தமிழ் இலக்கியங்கள் கடந்த காலத்தில் எப்படி இருந்தோம் என்பதை தாண்டி வருங்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் எனவும் எடுத்துரைக்கின்றன. பழங்காலத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தான் வாழ்ந்த காலத்தில் வீட்டில் பானையை செய்த தமிழன் தன் பெயரையும் பானையில் பொறித்து வைத்து சென்றுள்ளான்.

 

அத்தகைய பழம்பெருமை மிக்க பொருட்கள் 2600 ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. 2600 ஆண்டுகளாக தொடர்ந்து பண்பாட்டின் தொடர்ச்சியாக தமிழ்மொழி இன்றளவும் உயிரோட்டமாக உள்ளது. வாழ்வியலையும், வாழ்க்கையையும் கற்பிக்கும் மொழியாக தமிழ்மொழி மட்டுமே உள்ளது. 2600 ஆண்டுகளாக தமிழ்மொழியை உயிருக்கு உயிராக நேசிப்பதால்தான் அண்டை மாநிலங்களோடு நட்பு பாராட்டுகிறோம்.



 

நிலங்கள் பிரிந்திருந்தாலும் மனங்கள் ஒன்று சேர்ந்துள்ளன. தமிழில் இருந்து உருவானதுதான் மலையாளம். எனவே நிலங்கள் பிரிந்திருந்தாலும் அவர்களும் சகோதர்கள், தமிழர்கள் தான். கீழடி அருங்காட்சியகத்தை அனைவரும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். தமிழ் மொழியின் தொன்மை 2,600 ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்ற சமூகமாக தமிழ் சமூகம் உள்ளது.

 

சங்க இலக்கியத்தில் பயன்படுத்திய சொற்கள் தற்போது கூட வழக்காடு சொற்களாக பயன்படுத்தி வருகிறோம். பாண்டிய நாட்டில் பேசப்படும் மொழி தேவாரத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் தொன்மையை உறுதிப்படுத்தும் வண்ணம் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் அறிவுசார் நூலகமாக அமையும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண