தமிழக கேரளா எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை.
தற்போது பருவமழை குறைவால் முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக புரட்டாசி மாதங்களில் இப்பகுதியில் பருவ மழை இருக்கும். ஆனால் தற்போது மழையின்று பருவ நிலை மாறியுள்ளது. இந்த நிலையில் கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் போக சாகுபடி நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முதல் போக விவசாயத்துக்கு ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை பொய்த்து போனதால் முதல் போகம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்தது. இதைத் தொடர்ந்து முதல் போக விவசாய பணிக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் நெல் விவசாயம் நடைபெற்றது.
கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்போது அறுவடை பணி இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை பொறுத்த வரையில் 606 ரக நெல் 62 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1250-க்கும், ஆர்.என்.ஆர். ரக நெல் மூட்டை ரூ.1350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்