ஆஸ்திரேலியாவின் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மழை காரணமாக பல ஜாம்பவான் அணிகளின் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு சமமாக புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனால் எந்த அணி அரையிறுதிக்கு செல்லும்? யார் வெளியேறுவார்கள் என்ற பரபரப்பு நீடித்து வருகிறது.
இந்தநிலையில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு மூன்றாவது சுற்று போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்று போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் வங்கதேசமும், ஜிம்பாவே அணிகளும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானும், நெதர்லாந்தும், மூன்றாவது போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதுக்கின்றனர்.
இந்தநிலையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேச அணியும், ஜிம்பாவே அணியும் நேருக்கு நேர் சந்தித்தது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது.
151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே, 35 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய சேன் வில்லியம்ஸ் 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஓரளவு நம்பிக்கை அளித்தார்.
கடைசி 6 பந்துகளில் ஜிம்பாவே அணிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில், ரியான் பர்ல் மற்றும் பிராட் எவன்ஸ் களத்தில் இருந்தனர். முதல் பந்தை பர்ல் சிங்கிளாக மாற்ற, அடுத்த பந்தை சிக்ஸராக அடிக்க முயன்று எவன்ஸ், ஹூசைனிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் வெளியேறினார். அடுத்த களமிறங்கிய ரிச்சர்ட் ங்கராவா தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஸ்டெம்பிங் முறையில் அவுட்டானார்.
ஒரு கட்டத்தில் ஜிம்பாவே அணிக்கு 1 பந்தில் 5 ரன் தேவையாக இருந்தது. உள்ளே வந்த முசர்பானியும் ஸ்டெம்பிங் முறையில் அவுட்டானார். தொடர்ந்து மொசாடெக் ஹொசைன் வீசிய கடைசி பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் களம்கண்ட முசர்பானி கடைசி பந்தை வீண் செய்ய வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.