மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தடகள வீராங்கணை ரேவதி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டார். அவரை பாராட்டும் விதமாக அவருக்கு ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த ரேவதி தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். பல்வேறு குடும்ப நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வியை தொடங்கிய ரேவதி தனது 2ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்தார். மாநில அளவில் நடந்த தடகள போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த நிலையில் மதுரையை சேர்ந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதிக்கு பொருளாதார உதவியையும் பயிற்சியையும் அளித்து வந்தார். 



சிறப்பாக செயல்பட்ட ரேவதிக்கு லேடி டாக் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அங்கே சென்று தனது அடுத்தகட்ட தடகள பயிற்சியை தொடர்ந்த ரேவதி மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தேசிய முகாமில் தங்கி பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அங்கு சென்றவுடன் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து 400 மீட்டர் ஓட்டத்திற்கு தனது இலக்கை மாற்றிக்கொண்டார் ரேவதி. சமீபத்தில்  டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். அவரால் பரிசு பெறமுடியவில்லை என்றாலும் தொடர்ந்து அடுத்த முறை பங்கேற்று வெற்றி பெருவேன் என தெரிவித்துள்ளார்.




இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற ரயில்வேத்துறை விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா  புதுடில்லியில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற ரயில்வே விளையாட்டு வீரர்கள், ரயில்வே பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்தார்.




மேலும் வெள்ளி பதக்கம் வென்ற இரண்டு வீரர்களுக்கு தலா ரூபாய் 2 கோடியும், வெண்கலம் வென்ற மூன்று பேருக்கு தலா ஒரு கோடியும், போட்டிகளில் நான்காவது இடத்திற்கு வந்த 12 பேருக்கு தலா ரூபாய் 35 லட்சமும், ஆறாவது இடத்திற்கு வந்த ஒரு வீரருக்கு ரூபாய் 35 லட்சமும், போட்டிகளில் பங்கு பெற்ற மதுரை ரயில்வே ஊழியர் வீரமணி ரேவதி உட்பட ஏழு பேருக்கு தலா ரூபாய் 7.5 லட்சமும் பரிசும் வழங்கி பாராட்டினார். பதக்கங்கள் பெற உறுதுணையாக இருந்த பளுதூக்கும் பிரிவு, குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டு பயிற்சியாளர்கள் ஆறு பேருக்கும் ரூபாய் 82.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கவும் மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டார். விழாவில் ரயில்வே வாரிய முதன்மை செயல் அதிகாரி சுமித் சர்மா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.