முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. இலங்கையில் புலிகள் இயக்கத்துக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து. புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழித்து விட்டதாக அந்த நாடு கூறிவருகிறது. ஆனால், தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஒன்று கூடி செயல்பட்டு வருவதாகவும், குறிப்பாக, தமிழகத்தில் இதற்கு ஆதரவு தொடர்ந்து இருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியிலிருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி இரவு வாகன சோதனையின்போது காரில் வந்த இலங்கையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், உச்சிப்புளி அருகே நாகாச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன், டிரைவர் சசிக்குமார் ஆகியோரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்து வந்த சயனைடு குப்பிகள், இந்திய, இலங்கை பணம், செல்போன்கள், ஜி.பி.எஸ்., கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 6 ஆவது குற்றவாளியாக கைதாகி புழல் சிறையில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 'முருககுமரன் உதயகுமார்' என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்துள்ளார்.
'இலங்கைக்கு சயனைடு கடத்த திட்டம்'
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது 75 சயனைடு குப்பிகள், 600 கிராம் சயனைடு விஷம், 4 ஜி.பி.எஸ். கருவிகள், 46 ஆயிரத்து 200, ஒரு சவரன் தங்கம்,, இலங்கை பணம் 19 ஆயிரத்து 300, 9 செல்போன்கள், ஓட்டுனர் உரிமங்கள் ஆகியவை இருந்தன. அதில் வந்தவர்களை விசாரணை செய்தபோது இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற காந்தன் (வயது 43), உச்சிப்புளி சசிக்குமார் (32), மண்டபம் தில்லைநாச்சியம்மன் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (47) என்பதும், இவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும், சென்னை உத்தண்டியில் வசித்து வந்தவருமான சுபாஷ்கரன் (41) என்பவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மேற்கண்ட குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவத்தின்போது தப்பி ஓடிய இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த 'குமரன்முருகன் உதயகுமார்' (40) என்பவரை களியக்காவிளை பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் தனியாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.
'மீண்டும் புழல் சிறையில் அடைப்பு'
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் மேற்கண்ட குமரன் முருகன் உதயகுமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவர் ஏற்கனவே சிறையில் 4 ஆண்டுகள் இருந்ததால் அதனை தண்டனை காலமாக கருதி விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அவர் மீது சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது, போலியான முகவரியில் வருமானவரி கணக்கு எண் தொடங்கியது, ஆதார்கார்டு, சிம்கார்டு வாங்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மீண்டும் சென்னை புழல்சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.