சிவகங்கையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் நகரம்பட்டியில் இடிந்து சிதலமடைந்துள்ள சிவன் கோவில் சுவரில் எழுத்துகள் இருப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தொல்நடைக் குழுத் தலைவர் நா.சுந்தரராஜன், உறுப்பினர் கா.சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா தெரிவித்ததாவது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் பாகனேரியை அடுத்த நகரம்பட்டியில் 400 ஆண்டுகள் பழமையான கோயில், மறு கட்டமைப்பு கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
மேலே திருத்தியூர் முட்டத்து பாகனேரி
பாகனேரி பழமையான கல்வெட்டில் மேலே திருத்தியூர் முட்டத்து பாகனேரி என வழங்கப்படுகிறது, மேலும் இப்பகுதியை மருதுபாண்டியர்கள் வாழ்ந்த 17ஆம் நூற்றாண்டில் வாளுக்கு வேலி என்னும் படை தளபதியாக வாழ்ந்த செய்தியை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. பாகனேரி நாட்டில் ஆறு முதன்மையான ஊரில் ஒன்றாக நகரத்தார் வாழ்ந்த ஊராதலால் நகரம்பட்டி எனவும் இன்றைய நகரம்பட்டி வழங்கப்படுகிறது.
நகரம்பட்டி அகத்திசுவரமுடையார் கோயில்
நகரம்பட்டி ஊருக்கு வெளியே கதவங்குடி கண்மாய்ப் பகுதியில் பெரிதும் சிதலமடைந்த பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. அதில் ஒரு பக்க பக்கவாட்டுச் சுவர் இடிந்த நிலையில் மற்றொரு பக்க பக்கவாட்டு சுவரில் நான்கு கற்களில் தொடர்ச்சியான கல்வெட்டு காணப்படுகிறது.
கல்வெட்டு
கல்வெட்டு உள்ள எழுத்துக்களை கொண்டு 15 ,16 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. கல்வெட்டு உள்ள கற்கள் ஆங்காங்கே பொடிந்து குழி விழுந்து எழுத்துகள் முழுவதுமாக தெரியவில்லை. ஆனாலும் தெரியும் இடத்தில் வாசிக்க முடிகிறது, எழுத்துகள் முழுமையாக இல்லாததால் பொருள் புரிவதில் சிரமம் உள்ளது.
கல்வெட்டுச் செய்தி
ஆண்டு குறிப்பிட்டு இருக்கும் பகுதி சிதைவுற்று இருப்பதால் புரிந்து கொள்ள முடியவில்லை. கதவங்குடி வாக்கிய நல்லூர் நாயனார் அகத்தீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில் அதிட்டானாம், உபானம் கட்டுவதாக சொன்ன வண்ணஞ் செய்தார், சொன்ன வண்ணம் செய்தார் என்ற சொற்கள் மூன்று முறை அடுக்கி வருகிறது ஓரிடத்தில் உடையார் சூரிய தேவர் சொன்ன வண்ணம் செய்தார் என வருவதால் உடையார் சூரிய தேவர் என்பவர் இப்பகுதியின் ஆட்சியாளராகவோ அல்லது அரசு அலுவலராகவோ இருந்திருக்கலாம் மேலும் இக்கோவில் நாயனார் அகத்தீஸ்வரமுடையார் என்றும் தேவி திருக்காம கோட்டத்து நாச்சியார் என்றும் அறிய முடிகிறது.
வேங்கை, மாணிக்கவல்லி போன்ற கண்மாய் வயல் பகுதி கல்வெட்டுகளில் வருகிறது,அமுதுபடி சாத்து உள்ளிட்ட நித்திய நியமத்திற்கு இப்பகுதிகள் வழங்கப்பட்டிருக்கலாம். மேலும் பழந்தேவர் என்னும் சொல்லால் இக்கோவிலில் பழம் கோயிலாக இருந்து மறு கட்டமைப்பு புனரமைப்பு செய்யப்பட்டிருப்பதையும் இந்நிலம் கோவில் பண்டாரத்தில் எனும் சொற்கள்.
இரு இடங்களில் வருவதால் நிரந்தர கருவூலம் அமைக்கப்பெற்று கோவில் காக்கப்பட்ட செய்தியையும் அறிய முடிகிறது. பெரிதும் சிதைவுற்ற நிலையில் உள்ள இக்கோவில் தற்போதும் மக்களால் வழிபாட்டில் உள்ளது. கோவில் தொடர்பான விவரங்களை அறிய இவ்வூரைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் முத்தையா மற்றும் இந்திய கப்பல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கக் கூடிய சுப்பிரமணிய பாரதி, மேலும் பாலசுப்பிரமணி ஆகியோரிடம் கேட்டபோது பழமை மாறாமல் இக்கோவிலை புனரமைத்து பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 400 ஆண்டுகள் பழமையான கோவில் மறு கட்டமைப்பு குறித்த கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம்; மின்னொளி அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்த பெருமாள்