மதுரை மாவட்டத்தில் கிரானைட் மட்டும் மார்பில் தொழில்செய்யும் நான்கு வணிக நிறுவனங்கள் முப்பத்தி ஏழு கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது குறித்து மதுரை மண்டல அமலாக்கப் பிரிவு இணை ஆணையர் இந்திராவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  ஆய்வில் கிரானைட் மட்டும் மார்பிள் தொழில்செய்யும் நான்கு நிறுவனங்கள் 37 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு 33.59 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது என்று வணிகவரி துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 





 

காயல்பட்டினம் நகராட்சி வார்டுகளை 40ஆக அதிகரிக்க கோரிய மனு தள்ளுபடி 

 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார் அதில்,"காயல்பட்டினம் நகராட்சியில் 18 வார்டுகள் இருக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி காயல்பட்டினம் நகராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் வசித்து வந்தனர். ஆனால், குறைந்த மக்கள் தொகை கொண்ட சில நகரட்சிகளில் அதிகமான எண்ணிக்கையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

 

இதனால் அந்த நகராட்சிகளில் மக்கள் பணியில் ஈடுபடும் நபர்கள் சுலபமாக மக்களுக்கு சேவை செய்ய முடிகிறது. தற்போது நகர்ப்புற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் நடக்க உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட காயல்பட்டினம் நகராட்சியில் குறைந்த எண்ணிக்கையிலேயே வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் வார்டு கவுன்சிலர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள சிரமமாக இருக்கும். எனவே, காயல்பட்டினம் நகராட்சியில் அதிக எண்ணிக்கையில் வார்டுகளை பிரித்து, அதன் பின்பு தேர்தல் நடத்த மனு அளிக்கப்பட்டது. ஆனால் மனு மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. 

 



 

எனவே, காயல்பட்டினம் நகராட்சியின் வார்டுகளை 18 இல் இருந்து 40ஆக உயர்த்தவும், அதுவரை நடக்கவிருக்கும் நகராட்சி தேர்தல் அறிவிப்புக்கு தடை விதித்தும் உத்தரவிட  வேண்டும்" என  கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, "மனுதாரர் தாமதமாக, கடைசி நேரத்தில் ஏன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்? மனுதாரருக்கு ஏன் அபராதம் விதிக்க கூடாது? என கேள்வி எழுப்பினார்.இதையடுத்து மனுதாரர் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து,  நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.