தமிழக-கேரள இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் நீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி ஆகும் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று மிக்க ஒரு சிறப்பு தீர்ப்பு அளித்தது.




இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 130 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 138.5 அடியாக உயர்ந்தது. இதற்கிடையே அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தால் பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கேரள அரசு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றம் நீதிபதி ஏ.எம் கான்வில்கர் தலைமையில் விசாரிக்கப்பட்டது. அப்போது இரு மாநில தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஒரு உத்தரவை பிறப்பித்தனர். அதில் முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக்குழு பரிந்துரைத்துள்ள 139.50 அடி வரையிலான தண்ணீர் நவம்பர் 11ஆம் தேதி வரை தேக்கி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.




ஆனால் இந்த உத்தரவு வருவதற்கு முன்பே கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களிடம் 29 தேதி காலை 7 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட போவதாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கேரளா சார்பில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் பொதுப்பணி துறையினர் முன்னிலையில் அணையில் 29ம் தேதி காலை 7 மணிக்கு வினாடிக்கு 534 அடி வீதம் இரண்டு மதகு பகுதியிலிருந்து கேரளா பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது.




முன்னறிவிப்பின்றி முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தேனி மாவட்ட விவசாயிகள் மட்டும் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. அணையில்  142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என பல நாட்கள் கோரிக்கை வைத்திருந்த இந்த சூழலில் கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்கள் பொதுப்பணித்துறையினர் யாருக்கும் தகவல் கொடுக்காமல் அணையில் இருந்து உபரி நீரை திறந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக புகார் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே  அடுத்த ஒரு சில நாட்களிலேயே அணையிலிருந்து மேலும் மதகுகள் வழியாக அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இன்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் நீர்  138.40 (142) அடியாகவும்  நீர் இருப்பு 6723 கன அடியாகவும், நீர் வரத்து 3,736 கன அடியாகவும், நீர் திறப்பு 2,330 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையில் நீர்வரத்து தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.




இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு மதுரை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலை வருகை தந்தார். பின்னர் அவர் வெள்ள பணிகள் குறித்து முல்லைப்பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோருடன் கலந்துரையாடி அணையின் தற்போதைய கள நிலவரம், நீர்வரத்து, வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் நிலைநிறுத்துதல் தொடர்பாக செயற்பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் முல்லைப்பெரியாறு அணை உபரி நீர் வழிந்தோடிகள், நீர் வெளியேற்ற கணக்கீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து மதகுகளின் செயல்பாடுகள் சரியாக இயங்குவதை உறுதிசெய்தார். அணையின் கசிவுநீர் போக்கு, நீர்மட்ட கருவிகள் பரிசோதிக்கப்பட்டது. பேபிஅணை, மண் அணைகளை பார்வையிட்டு மேம்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூப்பில் வீடியோக்களை காண