Ajit Doval: தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பதற்றத்தில் எல்லைகள்:

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் 28 அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் விளைவாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமைதிக்கான பல்வேறு ஒப்பந்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டே வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையில் போர் விமானங்களின் பயிறிசிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், யாரும் விரும்பிடாத போர் வெடித்துவிடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் தான், இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் என கொண்டாடப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எங்கே என்ற கேள்வி எழுகிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்றால் யார்?

இந்தியாவில் உள்ள வலிமையான அதாவது அதிகாரமிக்க பதவிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஒன்று. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச அச்சுறுத்தல்கள் மற்றும் வாய்ப்புகள் உட்பட தேசிய பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் பிரதமருக்கு ஆலோசனை வழங்கக் கூடியவர். உளவுத்துறை அறிக்கைகளை ஒருங்கிணைத்தல், நெருக்கடி மேலாண்மை முயற்சிகளை வழிநடத்துதல் மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். வெளியுறவுக் கொள்கையை முடிவெடுப்பதிலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒரு முக்கிய உதவியாளராகவும், சர்வதேச விவகாரங்களில் பிரதமருக்கு நம்பிக்கைக்குரியவராகவும் செயல்படுவார். அதாவது எல்லை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றக் கூடியவர் ஆவார். 

இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே?

இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் என கொண்டாடப்படும் முன்னாள் உளவுத்துறை இயக்குனர் அஜித் தோவல் தான்,  கடந்த 11 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஆனால், அவர் திறம்பட செயல்பட்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினாரா? என்றால் ஆம் என்ற பதில் வருவது சந்தேகமே அதற்கு பல உள்நாட்டு மோதல்கள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத சம்பவங்களை குறிப்பிடலாம். அந்த வரிசையில் தான் தற்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஆனால், இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு வகிக்கும் அஜித் தோவல் அதனை முறையாக செய்யாதது ஏன்? இந்த பணிகளை விடுத்து அவர் எதில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தார்? என்பதே தற்போதைய கேள்வி.

பிரதமர் மோடியின் பயணம் ரத்து:

பஹல்காம் விவகாரத்தில் உளவுத்துறை முறையாக செயல்படவில்லையா? அல்லது உளவுத்துறையின் தகவல்கள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லையா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. அதோடு, கடந்த வாரம் காஷ்மீரில் உள்ள செனாப் மேம்பாலத்தை திறக்கவிருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதற்கு மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டாலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்ததும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. பொதுமக்களிடையே ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க இதனை மறைத்து இருந்தாலும், அதனை தொடர்ந்தாவது அந்த பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருக்கலாமே என்பதே பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது.

அஜித் தோவலின் தோல்வி?

அஜித் தோவல் பொறுப்பேற்றதில் இருந்து எல்லை மற்றும் உள்நாட்டில் நடந்த பல்வேறு முக்கிய மோதல் மற்றும் தீவிரவாத சம்பவங்கள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, 

  • 23.12.2014 - அசாமில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 85 பேர் மரணம்
  • 04.09.2015 - மணிப்பூரில் ராணுவ வாகனங்களின் மீது நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்
  • 25.06.2016 - ஜம்மு& காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்
  • 18.09.2016 - உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்
  • 24.04.2017 - சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்
  • 14.02.2019 - புல்வாமாவில் இந்திய ராணுவ வாகனங்களின் அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 46 வீரர்கள் கொல்லப்பட்டனர்

பற்றி எரியும் மணீப்பூர்:

மேற்குறிப்பிடப்பட்டவை அனைத்தும் கடந்த 11 ஆண்டுகளில் நடந்த தீவிரவாத மற்றும் ஆயுதக்குழுவினரால் நடத்தப்பட்ட மிக முக்கிய தாக்குதல்கள் மட்டுமே. இதுபோக பல சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறிய வண்ணமே உள்ளன. குறிப்பாக மணிப்பூர் விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. அங்கு இரண்டு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர். 

அரசின் ஆதரவு”

இவை எல்லாவற்றிற்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின், திறன் குறைபாடும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஒருவேளை, அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்து இருந்தாலோ அல்லது உரிய ஆலோசனைகளை தலைமைக்கு கொடுத்து இருந்தாலோ மேற்சொன்னவற்றில் பல நிகழ்வுகளை தடுத்து இருக்கலாம். 80 வயதான அஜித் தோவலுக்கு, பிரதமர் மோடி அரசு மீண்டும் மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பதில் தாக்குதல் நடத்தினோம் என மார்தட்டிக் கொள்வதால் மட்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிம்மதி கிடைத்துவிடுமா? திருப்பி அடிப்பது அல்ல, ஆபத்துகள் வராமல் தடுப்பதே பாதுகாப்பு துறையின் முதன்மை பணியாகும்.

ஆக்‌ஷன் எடுப்பாரா மோடி?

பாதுகாப்பு விவகாரத்தில் நடக்கக் கூடாத பல சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து அரங்கேறிய வண்ணமே உள்ளன. நாடாளுமன்றத்தில் கூட சிலர் அத்துமீறி நுழைந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏதேனும் தவறுகள் அம்பலமானாலோ அல்லது பெரும் விபத்து நேர்ந்தலோ, துறைசார் அமைச்சர் அல்லது பொறுப்பு வகிக்கும் அதிகாரி உடனே ராஜினாமா செய்ய வேண்டுமென அப்போதைய எதிர்க்கட்சியினர் வீதிக்கு இறங்கி போராடின.

ஆனால், தற்போதோ அசம்பாவிதங்களை தடுக்க வேண்டிய அமைச்சர்களும்/அதிகாரிகளும் நடந்த தவறுக்கு பொறுப்புக் கூட ஏற்பதில்லை. உதாரணமாக ரயில்வேதுறையில் விபத்துகள் அவ்வப்போது அரங்கேறி வந்தாலும், அந்த அமைச்சர் மீது பிரதமர் மோடி எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால், தனது அரசாங்கத்திற்கு இழுக்காகிவிடும்? என்று பிரதமர் கருதுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஒருவேளை அது உண்மையாகி தவறுகளை மறைப்பது, மடைமாற்றுவது பாதுகாப்பு விவகாரத்திலும் தொடர்ந்தால், நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகலாம்.