Pahalgam Terror Attack: எதிர்காலங்களில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
அனைத்துக்கட்சி கூட்டம்:
காஷ்மீரில் உள்ள சுற்றுலாத்தளமான பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகே பாதுகாப்பு படையினர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. சர்ச்சைக்குரில் பாகிஸ்தான் எல்லை ஓரத்தில் உள்ள இந்த சுற்றுலா தளத்தில் போதிய பாதுகாப்பு இல்லாதது ஏன்? தீவிரவாதிகள் ஊடுருவியது எப்படி? உளவுத்துறை கண்காணிப்பில் கோட்டைவிட்டதா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தான் நாட்டின் உள்விவகாரங்கள் அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிச்ஜிஜு ஆகியோர் தலைமையில் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
”ஆம், பாதுகாப்பு குறைபாடு தான்”
கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒற்றுமையாகப் போராட வேண்டும் என்று அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா கடந்த காலங்களில் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளது, தொடர்ந்து அதைச் செய்யும். இது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சார்பாக விவாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள், உளவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தாக்குதல் எப்படி நடந்தது, பாதுகாப்பு குறைபாடு எங்கே என்பது குறித்து விளக்கமளித்தனர். போதிய சாலை வசதில் இல்லாத ஒரு புல்வெளியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அங்கே பாதுகாப்பு குறைபாடு இருந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம்” என விளக்கமளித்தார்.
”மோடி வரலையே” - காங்கிரஸ் கேள்வி
தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக, அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக ஆதரவு அளித்துள்ளன. கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி சுற்றுலா தளத்தில் போதிய பாதுகாப்பு ஏற்படுத்தாது ஏன்? என கேள்வி எழுப்பினார். தாக்குலுக்கு பிறகு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய கார்கே, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆம் ஆத்மி கட்சியினரும் பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்காததை சுட்டிக் காட்டினர். ஆனால், அதே நேரத்தில் பிரதமர் மோடி பீகாரில் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.