மதுரை கள்ளிக்குடி அடுத்த வடக்கம்பட்டி கிராமம்தான் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் தாய் வீடாக கருதப்படுகிறது. வடக்கம்பட்டி ஊரில் முனீஸ்வரருக்கு கோயில் உள்ளது. தொழிற் வளர்ச்சியில் முன்னேற்றத்தை கொடுத்து 'முனியாண்டி விலாஸ் ஹோட்டல்' உதிக்கக் காரணமாக இருந்த முனீஸ்வரருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வெள்ளி அன்று திருவிழா நடைபெறுகிறது. வெள்ளி கிழமை பூஜை முடிந்து பின்னர் இரவு முழுவதும் கிடா வெட்டு நடைபெற்று, 50 பிரமாண்ட பாத்திரங்களில் சமையல் பணி நடைபெறும். சமையல் வேலைகள் முடிந்த பின்னர் காலை 4 மணியளவில் முனீஸ்வரருக்கு படையல் வைத்து பூஜைகள் நடத்தப்படும். இதனை அடுத்து சுற்றுப்புறம் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும் சுடச் சுட பிரியாணி வழங்கப்படும். இவ்வாறு வடக்கம்பட்டி மக்கள் முனியாண்டி கோயிலுக்கு விழா எடுக்கின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு 88 ஆவது ஆண்டாக இந்த முனியாண்டி திருவிழா நடைபெற்றது. முனீஸ்ரவர் விழாவின்போது பக்தர்களுக்குப் பிரசாதமாக மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி வழங்கப்படுவது இதன் சிறப்பு அம்சம் ஆகும். இந்தாண்டு காணிக்கையாகச் செலுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆடுகள், 250க்கும் மேற்பட்ட சேவல், 2000 கிலோ பிரியாணி அரிசி கொண்டு பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது.
முனியாண்டி கோயிலில் உள்ள முனீஸ்வரர் சைவம். எனவே அவருக்கு பொங்கல் படைக்கப்படுவதாகவும் அவர் அருகில் உள்ள கருப்பணச்சாமிக்கு கெடா வெட்டி படையல் வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். வடக்கம்பட்டியில் களைகட்டிய முனியாண்டி திருவிழா முனீஸ்வரர் கோயில் மட்டன் பிரியாணியை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். இந்த நிகழ்ச்சி சிறிய அளவில் தொடங்கியது தற்போது மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை வரை பக்தர்கள் அனைவருக்கும் 6 முறை சைவ உணவு வழங்கப்படுவதாகவும், சனிக்கிழமை காலை மட்டும் பிரியாணி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த விழாவிற்கான முழு ஏற்பாடுகளும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களே செய்கின்றனர். முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கூறும்போது அதிகாலை வழங்கப்படும் பிரியாணி பிரசாதம் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதகாவும். பிறருக்கு பசியென்றால் உதவும் அளவிற்கு செல்வம் நிறைவேறும் என தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சி பற்றி பக்தர்கள் தெரிவித்ததாவது:
முனியாண்டி சுவாமி வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் நடக்கும். வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி, மத பேதமில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சி.
இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இதன் மூலம் இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்