மதுரை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினை தொடங்கிவைத்தார். 2 லட்சத்து 64ஆயிரத்து 839 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயம்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ நோயை முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் 1705 இடங்களில் 2லட்சத்தி 64ஆயிரத்தி 839 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். இதேபோல் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் பேருந்துநிலையபகுதியில் நடைபெற்ற முகாமினை மேயர் இந்திராணி , ஆணையாளர் தினேஷ் ஆகியோர் தொடங்கிவைத்தார். மாவட்ட முழுவதும் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் பிறந்தது முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுவருகிறது. வேறு மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல் பகுதிகள், நரிக்குறவர் குடியிருப்புகள், இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் போன்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.