தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து பெரியகுளம் துணை தாசில்தார் ரிஷப் விசாரணை நடத்தினார். அதில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரியகுளம் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனிநபர்கள் சிலர் அபகரித்து தங்களின் பெயரில் பட்டா பெற்றனர்.



 


 

இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாக மாற்றப்பட்டன. மேலும், பெரியகுளம் துணை தாசில்தார் ரிஷப் கொடுத்த புகார்களின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய ஆனந்தி, ஜெயப்பிரிதா மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், நில அளவையர்கள் மற்றும் தனிநபர்கள் என மொத்தம் 14 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 




 


 

இந்த நிலம் அபகரிப்பு சம்பந்தமாக தேனி மாவட்ட குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற, டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டார். இதனால், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உள்ளனர். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.