விஜய்யின் சர்க்கார் திரைப்பட பாணியில் கார்ப்பரேட் கட்சி ஒன்று கேரள அரசியல் களத்தைச் சூடுபிடிக்கச் செய்துள்ளது. தமிழத்தில் திமுக, அதிமுக போல கிட்டத்தட்ட இருகட்சி முறை ஆட்சிக்கு பெயர் போன மாநிலம் கேரளா. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்றன. பிற கட்சிகள் அனைத்தும் இந்த அணிகளில் ஏதாவது ஒன்றில் இணைவதை வழக்கமாக கொண்டுள்ளன. 


தற்போது பாஜகவும் இந்து வாக்கு வங்கிகளை ஒருங்கிணைத்து 15% வாக்குகளுடன் மாநிலத்தில் ஒரு முக்கிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. 


இந்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் உதவியின் மூலம் டிவெண்டி 20 என்ற கட்சி கேரள அரசியல் களத்தை கலக்கி வருகிறது. அன்னா கிடெக்ஸ் கார்மண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் ஃபண்ட் மூலம் நடத்தப்படும் இக்கட்சிக்கு சாபு எம். ஜேக்கப் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இதில் பிரெண்ட்ஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் இயக்குநர் ஃபாசில், சண்டைக்கோழி புகழ் லால் போன்ற  கேரள திரைத்துறை பிரபலங்களும் சமீபகாலமாக இணைந்து வருகின்றனர். 


இதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மருமகன் வர்கீஸ் ஜார்ஜும் டிவெண்டி 20 கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பீ டீம் குறித்த சர்ச்சைகள் உலவி வரும் நிலையில் தற்போது அண்டை மாநிலமான கேரளாவிலும் பீ டீம் பேசிய பொருளாக மாறியுள்ளது. கார்ப்பரேட் கட்சியான டிவெண்டி 20 காங்கிரஸ் வாக்குகளை பிடிக்குமா அல்லது சிபிஎம் வாக்குகளை பிடிக்குமா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்புதான் தெரியவரும்.