"காஞ்சிபுரம் மாநகராட்சியில், 23-வது வார்டில் முறையாக கழிவுநீர் பிரச்சினை சரி செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் எழுந்துள்ளது"
காஞ்சிபுரம் மாநகராட்சி
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை, வளர்ந்து வரும் நகரத்தில் ஒன்றாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்வேறு குறைகள் இருப்பதாக தொடர்ந்து, பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது, பொதுமக்களின் புகாராக இருக்கிறது.
"எங்களுடன் கழிவுநீர்"
பொதுவாக கவுன்சிலர்கள் மக்களிடம் நேரடியாக பழகக்கூடிய மக்கள் பிரதிநிதியாக இருந்த வருகின்றனர். சில சமயங்களில் அவர்களின் பிரச்சார யுத்தி, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை காட்டிலும், வித்தியாசமாக மேற்கொள்வார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர், "உங்களுடன் ஸ்டாலின்"வாசகத்துடன் பொருந்தி போகும் வகையில், "எங்களுடன் கழிவுநீர்" என்ற வாசகத்துடன் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
ஏன் இந்த போராட்டம் ?
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாதாள சாக்கடை பிரச்சினை காரணமாக அப்பகுதி அவதிப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களும், போராட்டங்களும் நடத்தப்பட்ட போதிலும், கழிவுநீரை முறையாக வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியை சார்ந்த அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சின்ன காஞ்சிபுரம், அம்மகார தெரு முழுவதும் உள்ள பகுதிகளில் புதை வடிகால் பைப்லைன் உடைந்துள்ளதாகவும், அதை சரிசெய்தால் பிரச்சினை தீரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்தவித சீரமைப்புப் பணிகளும் நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் மற்றும் பொது சுகாதாரக் குழு உறுப்பினர் M.புனிதா சம்பத் கூறுகையில், "உணவுகள் உண்ணாமல் கூட ஒரு நாள் இருந்துவிட முடியும், ஆனால் இந்தக் கழிவுநீர் பிரச்சினையால் தினந்தோறும் மக்கள் உணவைக்கூட சரியாக உண்ண முடியாமலும், கழிவறை முழுவதும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கழிவறையைப் பயன்படுத்த முடியாத நிலையிலும், ஆங்காங்கே தெருவில் நிற்கும் கழிவுநீரில் கால் படாத பொதுமக்களே இல்லை என்ற நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது," என்று தெரிவித்துள்ளார். மேலும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்று சொன்னால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும், எனவும் எச்சரித்துள்ளார்.
அதிமுக கவுன்சிலர் புனிதா சம்பத்தின் இந்த நூதன பிரச்சாரம், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.