காஞ்சிபுரம் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வரலாற்று ரீதியிலும் முக்கியத்துவம் பெற்ற நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலை நிறைந்த மாவட்டமாகவும் உருவெடுத்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்றுமதியில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது. மின்சாதன பொருட்கள் உற்பத்தி செய்வதிலும், காஞ்சிபுரம் இந்திய அளவில் முன்னணி மாவட்டமாக இருந்து வருகிறது.
வரலாற்று ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் முன்னணி மாவட்டமாக இருந்து வரும் காஞ்சிபுரத்தில் பல மாவட்ட மற்றும் பல மாநில நிலங்களை சேர்ந்த வெளியூர் நபர்கள் காஞ்சிபுரத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். பல்வேறு துறைகளில் காஞ்சிபுரம் மாவட்டம் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், திருமணத்தைத் தாண்டி உறவில் இருப்பவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் காஞ்சிபுரம் முதலிடம் பிடித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.
Ashley Madison - டேட்டிங் செயலி அறிக்கை
Ashley Madison என்ற செயலி இந்தியாவில் திருமணத்தை மீறிய கள்ள உறவு குறித்த, டேட்டாக்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மாத அடிப்படையில் இந்தியாவிலேயே காஞ்சிபுரத்தில் தான் இந்த செயலியை அதிகமானவர்கள் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
"எதிர்ப்பு தெரிவிக்கும் காஞ்சிபுரம் மக்கள்"
காஞ்சிபுரத்தை மையமாக வைத்து செயல்பட்டு வரும் பல இன்ஸ்டாகிராம் பக்கங்களை சார்ந்த இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers), இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முறையான எந்தவித தகவலும் இன்றி காஞ்சிபுரத்தின் மீது, அவதூறு பரப்பப்பட்டு வருவதாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் காஞ்சிபுரத்தில் வைரலாக பரவி வருகிறது. அதேபோன்று காஞ்சிபுரத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
"அவதூறு பரப்ப வேண்டாம்"
இது தொடர்பாக காஞ்சிபுரம் வழக்கறிஞரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவருமான, மலையூர் புருஷோத்தமனிடம் தொடர்பு பேசிய போது: திருமணத்தை மீறி உறவுகள் குறித்த ஆய்வறிக்கையில், காஞ்சிபுரம் நகரம் முதலிடம் பிடித்திருப்பதாகக் கூறப்பட்ட செய்திக்கு பெரும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆய்வு ஒரு குறிப்பிட்ட நகரத்தின் மீது தேவையற்ற அவதூறைப் பரப்பும் வகையிலும் அமைந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் இருக்கும் யாருக்கும் இப்படி ஒரு செயலி இருப்பது தெரியவில்லை. இது ஒரு ஆன்லைன் டேட்டிங் தளத்தின் தரவுகள் மட்டுமேயன்றி, பொதுமக்களின் உண்மையான பிரதிநிதித்துவமாக இருக்க முடியாது. இந்த தளத்தைப் பயன்படுத்தும் அனைவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை எவ்வாறு உறுதி செய்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
உறுதி செய்யப்படாத தகவல்களை வைத்து நகரத்தின் ஒட்டுமொத்தப் போக்கை முடிவு செய்வது, அடிப்படைத் தரவு ஆய்வியலுக்கு முரணானது. பாரம்பரிய மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரமான காஞ்சிபுரத்தின் மீது, இதுபோன்ற ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிடுவது, திட்டமிட்ட அவதூறாகவே தோன்றுகிறது. இது காஞ்சிபுரத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
காஞ்சிபுரம் அதன் வளமான வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய பட்டுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது. இத்தகைய ஒரு ஆய்வறிக்கை, அந்நகரின் உண்மையான பிம்பத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக இதில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.