Union Budget 2024: பிரதமர் மோடி தலைமையிலான 3.0 அரசின் முதல் பட்ஜெட், நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய அரசின் இந்த பட்ஜெட்டில் காஞ்சிபுரத்திற்கு புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்:
இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின், முதல் நடவடிக்கையாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அமர்வு ஆகஸ்ட் 12 வரை 19 அமர்வுகளைக் கொண்டிருக்கும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பீகார் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற சொந்த கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை ஆளும் அரசு எதிர்கொண்டுள்ள நிலையில், நீட் தேர்வுத்தாள் கசிவு வழக்கு மற்றும் ரயில்வே பாதுகாப்பு போன்ற பிரச்னைகள் தொடர்பாக அரசாங்கத்தை கேள்வி எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.
இதனிடயே, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் நோக்கில், நேற்று டெல்லியில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது, கூட்டத்தொடரில் பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன.
மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற நிலையில், தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேவையான சில முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என, காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடையே என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆன்மீக நகரமாக காஞ்சிபுரம் இருப்பதால், முக்கியத்துவம் கொடுக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுமக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் என்ன ?
காஞ்சிபுரம் - செய்யாறு இடையிலான புதிய ரயில் பாதை திட்டத்தை பல ஆண்டுகளாக பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றன. இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வந்தால் செய்யாறு மக்கள் சென்னை செல்வதற்கு மிக பயனுள்ளதாக அமையும். ரயில்வே பட்ஜெட்டில் காஞ்சிபுரம் செய்யாறு இடையிலான புதிய ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 36 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடன், சுமார் 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் காஞ்சிபுரம் ஸ்மால் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றன.
காஞ்சிபுரம் கோவில் நகரமாகவும் அதிக அளவு வெளியூர் மற்றும் வெளிமாநில பயணிகள் வந்து செல்லும் நகரமாகவும் இருப்பதால், மத்திய அரசு பட்ஜெட்டில் காஞ்சி மாவட்டத்திற்கு என சுற்றுலா திட்டம் அறிவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
செங்கல்பட்டு- காஞ்சிபுரம்- அரக்கோணம் இடையே உள்ள ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆவடி- ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி இடையிலான புதிய ரயில் பாதித்திட்டத்திற்கு ரூபாய் 800 கோடி தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முதல் கட்டமாக சுமார் 58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கூடுதல் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றன.
பட்டு நகரமாக காஞ்சிபுரம் இருப்பதால், பட்டு நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய அரசின் பழைய மருத்துவ காப்பீடு திட்டம், மற்றும் ஜரிகை உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விதிவிலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளும் இருந்த வண்ணம் உள்ளன