"காஞ்சிபுரம் பட்டு பூங்காவை பார்வையிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த அயலக தமிழர்கள், கனடா,மலேசியா, மொரிசியஸ், மியான்மர், ஸ்ரீலங்கா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 95 அயலக தமிழர்கள், பாரம்பரிய காஞ்சி பட்டு புடவை தயாரிக்கும் பணியை வியப்புடன் கண்டுக்களித்தனர்"
"தமிழ்நாடு அரசின் வேர்களைத் தேடி திட்டம்"
புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் “மரபின் வேர்களோடு” உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, தமிழின் தொன்மை, தமிழர்களின் வாழ்வியல், கலாச்சாரம், கட்டடம்/சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் போன்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை முதலமைச்சர் துவங்கி வைத்தார்.
"தமிழக அரசின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி"
இத்திட்டத்தின்படி, அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து, தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவர்.
அதன் அடிப்படையில், இந்த பண்பாட்டு பயணம் அயலகத் தமிழர் நலத்துறையினால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17 நாடுகளைச் சேர்ந்த 194 தமிழ் இளைஞர்களைக் கொண்ட மூன்று கட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் வந்த வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள்
அதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் நான்காம் கட்ட பயணமாக, பிஜி, ரீயூனியன், மார்டினிக், குவாடலூப், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, மியான்மர், மொரிஷியஸ், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய 14 நாடுகளைச் சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் கடந்த 01 ஆம் தேதி துவங்கி வருகின்ற 15-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் கலாச்சாரங்கள் உள்ளிட்டவை, இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டது.
காஞ்சிபுரத்தில் தமிழ் இளைஞர்கள்
அந்த வகையில் 99 வெளிநாட்டு இளைஞர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு பாரம்பரியம் குறித்து எடுத்து கூறப்பட்டது. இன்று பட்டுக்குப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்திற்கு, அழைத்து வரப்பட்டனர். காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டுப் பூங்கா பகுதியில் பட்டு நசவு செய்வது எப்படி என்பது குறித்து, எடுத்துக் கூறப்பட்டது.
பட்டுப்புடவை தயாரிப்பதை கண்டு களித்த இளைஞர்கள்
காஞ்சிபுரம் பட்டு தயாரிப்பதை ஆர்வத்துடன் கண்டுக்களித்தனர். காஞ்சிபுரத்தில் பட்டு தயாரிப்பது, எப்படி என்பது அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறிப்பட்டு கண்காட்சியும் நடைபெற்றது. இதுகுறித்து வெளிநாட்டு வாழ் தமிழர்கள் கூறுகையில், காஞ்சிபுரம் பட்டு எனக்கூறி வேறு பட்டுப் புடவைகளை எங்கள் நாடுகளில் விற்பனை செய்வார்கள். அந்த பட்டுப்புடவைகளின் தரம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் காஞ்சிபுரத்தில் தயாரிக்கும் பட்டுப் புடவைகளை நேரில் பார்த்தது எங்களுக்கு பரவசமாக இருந்தது என தெரிவித்தனர்.