"காஞ்சிபுரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உறவினர்கள் குற்றவாளியின் வீட்டை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது"
"போதை பொருட்களால் சீரழியும் சதாவரம்"
காஞ்சிபுரம் மாநகராட்சி சதாவரம் பகுதியை சேர்ந்தவர் பாபு இவரது மகன், மாது என்கிற மாதவன் (19). மாதவன் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் காலத்தை கழித்து வந்துள்ளார். சதாவரம் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசிகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவு கிடைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
வழக்கமாக மாதவன் தனது நண்பர்களுடன் மது உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்திவிட்டு, வீட்டின் அருகே இருக்கும் பொது கழிவறை மீது உறங்குவது வழக்கமாக வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாதவன், தனது வீட்டு அருகே உள்ள கழிப்பிடம் மேல், உறங்கியுள்ளார்.
"இளைஞர் கொடூர கொலை"
கடந்த சனிக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும், மாதவன் கழிவறை மாடியிலிருந்து கீழே இறங்காததால், சந்தேகம் அடைந்த பெற்றோர் மேலே சென்று பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் மாதவன் இருந்துள்ளார், உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சையாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாதவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.
"17 வயது சிறுவன் கைது"
இந்த சம்பவம் தொடர்பாக, விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை அடிப்படையில் மாதவனின் நண்பன், 17 வயது சிறுவன் ஒருவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. மாதவனின் உடல் வீட்டிற்கு வந்தபோது, மாதவன் கொலையில், 5 பேர் சம்பந்தப்பட்ட இருப்பதாகவும், மேலும் 4 பெயரை கைது செய்ய வேண்டும் என திடீரென போராட்டத்தில் உறவினர்கள் இறங்கினர்.
சூறையாடப்பட்ட வீடு
போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ள 17 வயது குற்றவாளி வீட்டில் இருந்து ஆதாரத்தை சேகரிப்பதாக வீட்டை உறவினர்கள் சூறையாடினர். வீட்டிலிருந்த டிவி, பிரிட்ஜ், வீட்டு உபயோக பொருட்கள் சூறையாடே பட்டு வீட்டில் இருந்து சாலையில் வீசப்பட்டது. சம்பவம் வைத்து விரைந்து வந்த காவல்துறையினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உறவினர்கள் கூறுவது என்ன?
தொடர்ந்து இங்கு சம்பளம் குறித்து மாதவனின் உறவினர்கள் கூறுகையில், 25 கிலோ எடையுள்ள கல்லை தனி ஒருவராக தூக்கிக்கொண்டு, மேலே தூங்கி இருந்தவரின் தலையில் போட்டு கொலை செய்ய முடியாது. படிக்கட்டு ஏணிகள் எதுவும் இல்லாததால், சர்வ சாதாரணமாக அதன் மீது ஏறுவதே கடினம். எனவே, இந்த கொலை சம்பவத்தை 5 பேர் செய்திருக்கின்றனர் என தெரிவித்தனர்.
மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் மேலும் ஒரு குற்றவாளி இருந்ததாகவும் அவருடைய செருப்பு அங்கு இருந்ததாகவும், உறவினர்கள் செருப்பை கையில் வைத்துக் கொண்டு ஆதாரத்துடன் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
காவல்துறை விளக்கம் என்ன?
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் கேட்டபோது: குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இந்த வழக்கில் இதுவரை ஒருவர் மட்டுமே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.