தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
தோழி மகளிர் விடுதிகள்
தமிழ்நாடு அரசு சார்பில் பணிபுரியும் மகளிர்களுக்காக, தோழி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தாம்பரம் உள்ளிட்ட 13 இடங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பத்து இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோழி விடுதிகள் கட்டப்பட உள்ளன.
தொழிலாளர் நலன்
திறன்மிக்க மனித வளத்தை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலைகளில், தேவைக்கேற்ப இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வேலைக்கு வாய்ப்புகளை பெற்றுத்தர, அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் தல 4 தொழில் பிரிவுகள் கொண்ட புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் உருவாக்கப்பட உள்ளது. 152 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் பத்து இடங்களில் இந்த பயிற்சி நிலையம் உருவாக்கப்பட உள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள்
காஞ்சிபுரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உதவியுடன் 148 கோடி ரூபாய் செலவில், காஞ்சிபுரம் முட்பட்ட ஏழு மாவட்டங்களில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைய உள்ளன. சுமார் ஆறு தொழிற் பிரிவுகளுடன் இந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
புதிய தொழில் பூங்கா
காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலை நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொழிற்சாலை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை தமிழ்நாடு அரசிற்கு, காஞ்சிபுரம் மாவட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் பகுதியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பயன்படும் வகையில் புதிய தொழில் பேட்டையில், தமிழ்நாடு சிறு தொழில் முன்னேற்றக் கழகத்தால் உருவாக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒன்பது இடங்களில் சுமார் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சிப்காட் பூங்கா உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 17,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை
இந்திய அளவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக இருந்து வருகிறது. சமீப காலமாக புற்றுநோய்க்கு தரமான சிகிச்சையை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மாநில அளவில் முதன்மை புற்றுநோய் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை 800 படுகைகளுடன் கூடிய தன் ஆட்சி பெற்ற மையமாக செயல்படும் வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 120 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம்
சென்னைக்கு அருகே பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தென்னரசு சட்டசபையில் அறிவிப்பு.
மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு
தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி. விரிவான நகரமயமாக்களை கருத்தில் கொண்டு, தலைநகர் புது டெல்லி-மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே மிக மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதைப் போன்று, மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு ஒன்றினை தமிழ்நாட்டில் ஏற்படுவதற்காக சாத்தியக்கூறுகள் ஆராயப்பட உள்ளது.
அந்த வகை சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக திண்டிவனத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில், சுமார் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.