காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் ஆலை தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கடந்த செப்டம்பர் மாதம் 30 நாட்களுக்கும் மேலாக ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த, பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு அக்டோபர் 14 ஆம் தேதி முதல் வழக்கம் போல தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ்
போராட்டத்தில் இருந்து பணிக்கு திரும்பிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஆலைக்கு உள்ளே முந்தைய பணி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதேபோல, சி.ஐ.டி.யு., தொழிலாளர்களை குறிவைத்து, ஒழுங்கு நடவடிக்கையை மீறியதாக 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளது.
அதேபோல நிர்வாகம் உருவாக்கியுள்ள இன்டர்னல் யூனியனில் இணைய, தொழிலாளர்களை வற்புறுத்தி உள்ளது. தொடர்ந்து, தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், நிர்வாகத்தின் அழுத்தம் தாங்காமல் தொழிலாளர் ஒருவர் நேற்று இரவு தற்கொலைக்கு முயன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உண்ணாவிரத போராட்டம்
இந்தநிலையில் சாம்சங் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து வரும் 19-ம் தேதி சாம்சங் தொழிற்சாலைக்கு உள்ளேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில், சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் முடிந்து சுமுக சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்ப்பு பின்னணியில் வேலைக்கு சென்ற தொழிலாளிகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்ட உடன்பாட்டிற்கு எதிராக பல்வேறு விதமான பழிவாங்கள் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. 35க்கும் மேற்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட முன்னணி தோழர்களை அதிரடியாக இடமாற்றம் மற்றும் பொய்கூற்றசாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டு வருகின்றன.
மன உளைச்சல்
நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற கமிட்டியில் சேருமாறு தொழிலாளர்களை மணிக்கணக்கில் கவுன்சிலிங் செய்கிற மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நடவடிக்கை தொடர்கின்றன. நிர்வாகத்தின் வற்புறுத்தலை ஏற்க முடியாத தொழிலாளர்கள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆதரவு பெற்ற கமிட்டிகள் மூலம் வசை சொல்லுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
மேற்கண்டசூழலில் சுதாகர் என்கிற ஒரு தொழிலாளியை தொடர்ச்சியாக வற்புறுத்தி அவருக்கு விருப்பம் இல்லாத பகுதியில் கட்டாய இடமாற்றம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய காரணத்தினால் இவர்களின் இம்சைகளை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொள்ள அதிக அளவிலான மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார். தன்னுடைய மரணத்திற்கு நிர்வாகத்தின் அச்சுறுத்தலும் பழிவாங்கல் நடவடிக்கைகளே காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உதவி செய்யவும் அவர் நிலைமை குறித்து கேட்டு அறியவும் பணியில் இருந்த சங்கத்தின் நிர்வாகிகளை நிர்வாகம் சந்திக்க அனுமதிக்கவில்லை. முதல் கட்டமாக வருகிற 19.12.2024 அன்று பகல் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் 1500 தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள். தொழிற்சங்கத்தை பதிவு செய்யும் பிரச்சினையில் 6 வார காலத்திற்குள் முடிவெடுங்கள் என்று உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்ட பிறகும் தமிழக அரசும் தொழிலாளர் துறையும் இன்று வரையிலும் அது குறித்து சிறு துரும்பை கூட அசைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.