தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


ஐம்பெரும் விழா


காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட வர்த்தக துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள், கக்கன் பிறந்தநாள், ராகுல் காந்தி பிறந்த நாள் என ஐம்பெரும் விழா குன்றத்தூர்  பேருந்து நிலையத்தில் வர்த்தகத் துறை தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெருமந்தூர் எம்எல்ஏவும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவருமான செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், தையல் மிஷின்கள், 5 பேருக்கு ஆட்டோ உள்ளிட்டவற்றை வழங்கினார்கள்.




விழா மேடையில் நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தபோது நடிகரும் எம்பி, விஜய் வசந்த் அருகே கீழே இருந்த சிறுவர்கள் மேடை ஏறி சென்று அவரிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். வரிசையாக வந்த சிறுவர்களிடம் முகம் சுளிக்காமல் செல்போனை வாங்கி விஜய் வசந்த் செல்பி எடுத்தபடி இருந்தார்.


துரோகம் செய்வதுதான் பாஜகவின் வேலை


இதையடுத்து செல்வப்பெருந்தகை  செய்தியாளரை சந்தித்த பொழுது தெரிவித்ததாவது: தேர்தல் பணிகளை நாங்களும் தொடங்கி விட்டோம். தற்போது நடப்பதும் தேர்தல் பணிதான், காமராஜர் பிறந்தநாளில் கன்னியாகுமரியில் தொடங்கி விட்டோம். தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவது, குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். நாங்கள் முடிவு செய்வது அல்ல, எப்பொழுதும் தமிழகத்துக்கு துரோகம் செய்வதுதான் பாஜகவின் வேலை பத்தாண்டுகளாக செய்த துரோகத்தை இந்த ஆண்டும் செய்வார்கள்.


பாஜக கவலையாக உள்ளனர்


தமிழகத்தை வஞ்சித்து வந்தார்கள் இப்போதும் வஞ்சிப்பார்கள், ஜார்கண்ட் முதல்வர் சிபு சோரனுக்கு ஜாமின் கொடுத்தார்கள். தொடர்ந்து அமைச்சருக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதனால் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை நீதிதான் வெற்றி பெறும் என தெரிவித்தார். காமராஜரை எல்லோரும் கொண்டாட முடியும், அவரை சொந்தம் கொண்டாட முடியாது. காங்கிரஸ் மட்டும் தான் அவரை சொந்தம் கொண்டாட முடியும்.


 




அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக வந்த தமிழர்  என்றால் காமராஜர் மட்டும் தான். இப்போது நாம் எதிர்க்கட்சி வரும் காலத்தில் ஆளும் கட்சியாக வருவோம். மோடியின் ஆட்சி நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியாக பாஜக இருந்தாலும் அவர்கள் கவலையாக உள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் மகிழ்ச்சியாக உள்ளது. காங்கிரஸ் வாக்கு வங்கி அதிகரிக்க வேண்டும். அப்போது தான் இந்தியா கூட்டணி வலிமை பெறும் என தெரிவித்தார்.