காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரதான அரசு மருத்துவமனையாக இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர் ‌.


மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு


கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர்‌ கலைச்செல்வி மோகன் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நுழைவு சீட்டு வழங்கும் மையத்தினையும், பின்பு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பொது பிரிவு மையம் விபத்து பிரிவு, அவசரகால சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மையத்தையும், டயாலிஸிஸ் மையத்தையும், கண் சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.




சிறுமியின் நெகிழ்ச்சி செயல் 


அப்போது, மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகளில் சிறுமி ஒருவர், பேட்டரி லைட் வெளிச்சத்தின் உதவியுடன் படித்துக் கொண்டிருந்த வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீடியோவில், பேட்டரி லைட் வெளிச்சத்துடன், பள்ளி மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தார் . சிறுமியின் உறவினர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுமியின் இத்தகைய செயல் வரவேற்பை பெற்றுவிட்டது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்ட மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. சிறுமியின் இத்தகைய செயல் குறித்து, ஏபிபி நாடு செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டு இருந்தது.


யார் அந்த சிறுமி ?


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தை சேர்ந்த சிங்காடிவாக்கம் கிராமத்தில் வசிப்பவர் ராஜி - சுமதி தம்பதியனர். இவர்களுக்கு தென்னரசு என்ற கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவனும், பத்தாம் வகுப்பு பயிலும் திவ்யதர்ஷினி என்ற பெண்ணும் உள்ளனர். இதில் திவ்யதர்ஷினி காஞ்சிபுரம் ஏனாத்தூர் சாலையில் உள்ள மரியா ஆக்ஸிலின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.


இந்நிலையில் இவரது தந்தை ராஜியின் அக்காவின் மகள் பிரசவத்திற்காக, கடந்த மாதம் 27ம் தேதி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.‌ அப்போது காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்டு வந்தபோது, மகப்பேறு பிரிவுக்கு எதிரே உள்ள சாலை ஓரம் சிறுமி திவ்யதர்ஷினி சிறிய விளக்கு ஒளி வெளிச்சத்தில் தனது வீட்டுப்பாடத்தை செய்து கொண்டிருந்தார். ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மருத்துவமனை அதிகாரிகள் என இருபதுக்கும் மேற்பட்டோர், அவ்வழியாக கடந்து சென்ற போதும் கவனத்தில் இல்லாமல்,‌ மாணவி படித்துக் கொண்டிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.




தேடி வந்த உதவி


இதனைப்பார்த்த தனியார் நிறுவனத்தின் பணிபுரியும் கணேஷ் என்பவர் , பள்ளி மாணவிக்கு உதவுவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டார்.‌ அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கலைச்செல்வி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் முன்னிலையில் அந்த பள்ளி மாணவிக்கு உடைகள், டிஜிட்டல் வாட்ச் மற்றும் கல்விக்கு தேவையான உபகரணங்கள் என பலவற்றை அளித்து பாராட்டினார். அவரது கனவு குறித்து கேட்டபோதுதான், ஐபிஎஸ் ஆக வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.