பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை,  ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் எடுப்பதாக கூறி, நிலம் எடுப்பு அறிவிப்பை நாளிதழ் மூலம் வெளியிட்டுள்ளது. 


 


பரந்தூர் விமான நிலையம்


சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் சுற்று வட்டார 20 கிராமப்புறங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.‌ பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுவதால் குடியிருப்புகள், விலை நிலங்கள், நீர்நிலைகள், உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.






தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் 


உண்ணாவிரதப் போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், சாலை மறியல், தலைமை செயலகத்தை நோக்கி பேரணி, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம், கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு, பள்ளிப் புறக்கணிப்பு, நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு, என பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் 764 வது நாளாக இரவு நேரங்களில் ஒன்று கூடி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோக தங்கள் பகுதியில் பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.





நில எடுப்பு அறிவிப்புகள் 




இந்தநிலையில் விமான நிலையம் அமைக்க  தேவையான நிலங்கள் எந்தெந்த கிராமங்களில், எவ்வளவு எடுக்கப்படுகிறது என வரையறுத்து நில எடுப்பு அறிவிப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிட்டு வந்தது.




விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக கூறி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.





ஏகனாபுரம் நில எடுப்பு அறிவிப்பு


மேலும் நிலங்களை பார்வையிடுவதற்கும் அளவீடு செய்வதற்கும் அரசு அதிகாரிகளையும் அனுமதிக்காமல் இருந்தனர். இந்தநிலையில் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் தற்பொழுது ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை நாளிதழ்களில் இன்று வெளியிட்டு உள்ளது.




ஏகனாபுரத்தில் உள்ள நிலங்களின் வகைகள் சர்வே எண்கள் கிராம மக்களின் பெயர்கள் உள்ளிட்டவை குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏகனாபுரம் கிராமத்தில் 152.95 ஏக்கர் பரப்பளவிலான 6,19,250 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த உள்ளனர்.நில எடுப்பது குறித்து ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பு ஏகனாபுரம் கிராம மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலம் எடுப்பு குறித்து அறிவிப்பு வெளியாய நிலையில் போராட்ட குழுவினர், காலை முதலே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஆலோசனை முடிவில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.