காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் வாந்தி, வயிற்று போக்கு காரணமாக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதி

திடீரென பாதிப்படைந்த வையாவூர் கிராம மக்கள்


காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் எல்லம்மாள் தெரு பகுதி உள்ள பத்துக்கும் மேற்பட்டோர் நேற்றிரவு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

கடந்த சில தினங்களாகவே அப்பகுதி முழுவதும் உள்ள பொதுமக்கள் அவ்வப்போது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக புகார் தெரிவித்த நிலையில் இன்று சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் உள்ள குடிநீர் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 



 

 உடனடி நடவடிக்கை


திடீரென 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும் இந்த கிராமத்தில் குடிநீர் நேரடியாக போர் மூலமாக அனைத்து வீடுகளிலும் வழங்கப்படுவதால் தண்ணீரில் குளோரின் கலந்து வழங்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

 

தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே இது போன்ற அறிகுறிகள் இருந்து வந்ததாகவும், இந்தநிலையில் தான் ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்திருப்பதும் கிராம மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

மருத்துவ முகாம்


இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களை பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து கிராமம் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோக, தண்ணீர் மூலமாக இந்த தொட்டு பரவி இருக்கலாம் என்பதால், அது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் இந்த பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த வையாவூர் காலனி டேங்க் தெரு பகுதியை சேர்ந்த சரோஜா என்ற மூதாட்டி திடீரென உயிரிழந்திருக்கும் சம்பவம் பொதுமக்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகவும் தற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

 



 

இது குறித்து சுகாதாரத்துறை  இணை ஆணையரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபொழுது , வையாவூர் கிராமத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அங்கு, மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ முகாமில் 17 நபர்களுக்கு லேசான அறிகுறிகள் தெரியவந்தது.  உடனடியாக அறிகுறிகள் இருந்த 17 நபர்களுக்கும் முதல் உதவி மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

தண்ணீர் மூலம் பரவி இருக்கலாம்


இதுபோக ஒரு சிலர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அவர்களும் குணம்பெற்று சரிசெய்யப்பட்டு விட்டனர்.  தண்ணீர் மூலம் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என  தெரியவந்துள்ளது. எனவே குடிநீர் ஏற்றும் டேங்க் மற்றும் குடிநீர் குழாய்கள் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஊராட்சி சார்பில் அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



 

கிராமத்திற்கு குடிநீர் அங்கிருக்கும் கிணறு மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோக குடிநீரைக் காய்ச்சி குடிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்ததாக கூறப்படும் மூதாட்டி, இதனால் உயிர் இழந்தார் என்பது குறித்து மருத்துவ அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்