பொது இடத்தில் கழிவு நீரை ஊற்றிய டேங்கர் லாரியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்.
கழிவுநீர் வாகனங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னை புறநகர் பகுதிகள் அதீத வளர்ச்சியை நோக்கி பயணம் செய்து வருகிறது. இதனால் அதிக அளவு குடியிருப்பு பகுதிகளும் பெருகி வருகிறது. பெரும்பாலான இடங்களில் அகற்றப்படும் கழிவினர்கள் முறையாக சுத்திகரிக்கப்படுவது கிடையாது. கழிவுநீர் வாகனங்களும் அனுமதியின்றி சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை நீர் நிலைகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் கொட்டி விட்டுச் செல்வது தொடர்கதை ஆகியுள்ளது.
சுகாதார சீர்கேடும்
கழிவுநீர் வாகனங்களை கண்காணித்து, தவறு செய்பவர்களை தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் இருக்கும் துறை அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடும், நீர்நிலைகள் பாதிப்படைவதும், நீர் நிலைகள் பாதிப்படைவதால் மறைமுகமாக நிலத்தடி நீரும் பாதிப்படைந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் பயன் இல்லாமல் இருந்து வருகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ற்பாய்வு மேற்கொள்ள சென்ற பொழுது, பொது இடத்தில் கழிவு நீரை கொட்டி சென்ற வாகனத்தை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தகவல் தற்பொழுது வெளியாகி, மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம் அமரம்பேடு ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேற்று நேரில் ஆய்வு சென்றார். அப்போது, ஸ்ரீபெரும்புதுார்--குன்றத்துார் நெடுஞ்சாலையோரம் டேங்கர் லாரி ஒன்று கழிவு நீர் ஊற்றுவதை கலெக்டர் பார்த்தார். இதையடுத்து அந்த லாரியை பிடித்து சோமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பிடித்துக் கொடுத்த மாவட்ட ஆட்சியர்
சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமரம்பேடு பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் கிறிஸ்டோபர் மற்றும் ஓட்டுனர் தனுஷ் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர். குடியிருப்பில் கழிவு நீரை அகற்றும் லாரிகள் அவற்றை சுத்திகரிப்பு நிலையத்தில் ஊற்ற வேண்டும் என விதிமுறை இருந்தும் நீர் நிலைகள், பொது இடத்தில் கழிவு நீரை ஊற்றி கழிவு நீர் அகற்றும் டேங்கர் லாரி ஓட்டுனர்கள் அடாவடியில் ஈடுப்பட்டு வரும் நிலையில், பொது இடத்தில் கழிவு நீரை ஊற்றிய டேங்கர் லாரியை மாவட்ட கலெக்டர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவத்தை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
எப்பொழுதும் மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க முடியுமா ?
தொடர்ந்து இதுபோன்று கழிவுநீர்களை பொது இடங்களில் வெளியேற்றும் சம்பவம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்களும், அப்பகுதிவாசிகளும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். ஒவ்வொரு முறையும் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து கண்காணித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர். எனவே கழிவுநீர் வாகனங்களை முறையாக கண்காணித்து, தவறு செய்பவர்களின் உரிமங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இனியாவது தவறு செய்யும் கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது