காஞ்சிபுரம் பாலாறு பகுதியில், புதியதாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
வளர்ச்சியை நோக்கி காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருந்து வருகிறது. ஆன்மீக நகரமாகவும், பட்டு சேலைகளுக்கு புகழ் பெற்ற நகரமாகவோ இருந்து வருவதால் பல லட்சக்கணக்கான மக்கள் தினமும் காஞ்சிபுரம் நோக்கி படையெடுக்கின்றனர். இதனால் காஞ்சிபுரம் நகருக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் பாலாறு அமைந்துள்ளது. இந்தப் பாலாற்றின் குறுக்கே, புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்திலிருந்து செவிலிமேடு வரை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட அமைக்கப்பட்டது. செவிலிமேடு பாலாறு பாலம் வழியாக நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள், சென்று வருகின்றன.
காஞ்சிபுரம் பாலாறு பாலம் - Kanchipuram Sevilimedu Bridge
குறிப்பாக செவிலிமேடு பாலம் வழியாக வந்தவாசி, திண்டிவனம், பாண்டிச்சேரி, விழுப்புரம், சேத்பட், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றன.
தொடர்ந்து, வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், பாலம் கட்டி முடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் மேலாகி வருவதால் பாலம் சேதமடைய தொடங்கியுள்ளது. பாலத்தின் சிமெண்ட் தரைகள் பெயர்ந்து, கம்பிகள் தெரியும் வகையில் பாலம் சேதமடைந்துள்ளது. பல இடங்களில் குழிகளும் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. அவ்வப்போது பாலம் சேதம் அடையும் பகுதிகளை சரி செய்தாலும், மீண்டும் சேதம் அடைந்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அதேபோன்று முகூர்த்த நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் காஞ்சிபுரத்திலிருந்து வெளியேறும் வாகனங்கள் அதேபோன்று காஞ்சிபுரத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றன. ஒரே உயர்மட்ட பாலம் இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் அதிகளவு ஏற்படுகிறது.
சில நேரங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறை இறங்கியது.
இதையும் படிங்க: பெரியகுளம் அருகே கோர விபத்து! கார்-வேன் நேருக்கு நேர் மோதல்! கேரளாவை சேர்ந்த 3 பேர் பலி
புதிய உயர்மட்ட பாலாறு பாலம் - Kanchipuram New sevilimedu Bridge
செவிலிமேடு பாலாறு குறுக்கே புஞ்சை அரசன் தாங்கல் பகுதியிலிருந்து செவிலிமேடு வரை புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் 900 மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது. பாலத்தின் அகலம் 7.5 மீட்டராக இருக்கும். இருபுறம் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் இருபுறமும் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
பணிகள் தொடங்கியது:
பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்ற முடிந்துள்ளன. அதிகாரிகள் நேரடியாக சென்று இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து, பாலம் அமைப்பதற்கு முதற்கட்ட மண் பரிசோதனையும் நடைபெற்று முடிந்துள்ளது. மண் பரிசோதனை பணிகள் நிறைவடைந்த உடன், முழுமையான பாலத்தின் திட்ட மதிப்பீடு, பாலம் அமைப்பதற்கான வரைபடம், பாலம் வேலைக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Jallikattu : "ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி இருக்காது" - அமைச்சர் மூர்த்தி அதிரடி தகவல்!
பொதுமக்கள் மகிழ்ச்சி:
செவிலிமேடு பாலாறு பகுதியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான பணிகள் நடைபெற்று, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை வைத்துள்ளனர். விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் இந்த உயர்மட்ட பாலம் மிக பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.