சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வடகிழக்கு பருவமழையானது” இரவு மற்றும் காலை நேரங்களில்தான் கனமழையானது இருக்கும் எனவும் சென்னையில் , இன்று மாலையிலிருந்தே மழை தொடங்கும் எனவும் சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார்.


ரெட் அலர்ட்:


வட கிழக்குப் பருவ மழை நாளை (அக்.15) தொடங்க உள்ள நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 டெல்டா மாவட்டங்களுக்கு அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


நாளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


காஞ்சிபுரத்தின் நிலை என்ன ?


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு 21 பல்துறை மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 276 JCB-க்கள், 10 படகுகள், 30 ஜெனரேட்டர்கள், 250 நீர் இறைப்பான்கள், 43 மர அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களும், 62 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. 


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன ?


இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், கலைச்செல்வி மோகன் தெரிவிக்கையில், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, வடகிழக்கு பருவமழை 2024 தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள், சார்ந்த அலுவலர்களுடன் 24 X 7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தை சுலபமாக தொடர்பு கொள்ளவும், தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல், கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களை பொது மக்கள் எளிதில் தெரிவிக்க கீழ்காணும் தொலைபேசி எண்கள் /அவசர கால உதவி எண்கள் மற்றும் சமூகவளத்தளம் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள்.


தொலைப்பேசி : 044-27237107


கைப்பேசி/வாட்ஸ் அப் எண்: 8056221077


செய்ய வேண்டியது என்ன ? (TN-ALERT)


வடகிழக்கு பருவமழை - 2024 பாதிப்புகளை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள், உள்ளூர் வாசிகள் அரசு அலுவலர்களுடன் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் பொதுமக்கள் வானிலை செய்தி தொடர்பாக வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள TN - ALERT எனும் செயலி மூலமும், மாவட்ட நிர்வாகத்தினால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுனையும் பின்தொடருமாறும் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.