காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் ஆடவர் கல்லூரியில் இன்று, மாவட்ட நிர்வாகம் , தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் மதர்சன், உண்டாய், பெக்கட்ரான், டிவிஎஸ், உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.
இளைஞர்களுக்கு கிடைத்த வேலை
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் , இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வேலை பெற்ற இளைஞர்களுக்கு குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பேசியது என்ன ?
இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், உள்ளூர் இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என நல்ல நோக்கில் தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் 5 ஆயிரம் நபர்கள் வரை பங்கு பெற்றுள்ளார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன். அப்போலோ மருத்துவமனை, மதர் சன், உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் வரை தகுதி உள்ள மாணவர்கள் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 வேலைவாய்ப்பு முகங்கள் நடைபெற்ற உள்ளது. இந்த முகாம்களில் 4761 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இது போன்ற முகாம்கள் நடைபெற்ற வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரும், நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த முதல்வர்
தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்பு முகாம் குழு சார்பாக 3,65,000 வேலைவாய்ப்பு முகாம்களும், நான் முதல் முதல்வன் திட்டம் மூலம் 2,730 நபர்களுக்கும், மொத்தம் 5 லட்சத்து 13 ஆயிரத்து 681 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சீருடை பணியாளர் தேர்வு என மொத்தம் அரசு பணிகளில் 68, 309 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது. விரைவில் 68,000 மேற்பட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன.
1996-2001 கலைஞர் ஆட்சியில், ஸ்ரீபெரும்புதூர் ,சுங்குவார்சத்திரம், வல்லம், வடகால் ,மறைமலைநகர், சிறுசேரி தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தினார். 2001 -2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் ஒரு தொழிற்சாலை கூட தொடங்கப்படவில்லை . 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தொழிற்சாலைகள் துவங்கப்பட்டது. 5 வருடங்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டது. இங்க பல்லாயிரக்கணக்கானவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திமுக அரசு. இந்தநிலையை உருவாக்கியவர்கள் கலைஞர் மற்றும் இப்பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு கடன் உதவி
அரசு தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு , 129 இளைஞர்கள் அதன் மூலம் அரசு வேலைகள் பெற்றுள்ளார்கள். வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு, எதற்கும் பயப்பட வேண்டாம். பல்வேறு தொழில் தொடங்குவதற்காக ஏற்பாடு செய்து வருகிறோம். எவ்வளவு பேர் வந்தாலும் தொழில் தொடங்க வேண்டும் என்று வந்தால் , மானியத்துடன் கடன் உதவி அளிக்கிறோம். நீங்கள் வேறு ஒருவரிடம் கை கட்டிக்கொண்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை நீங்களே தொழில் தொடங்கி, கௌரவமாக வாழலாம். தமிழ்நாட்டில் 33, 406 இளைஞர்களை தொழில் முனைவராக தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது என இளைஞர்கள் மத்தியில் பேசினார்.