இயற்கைசூழல் மற்றும் பசுமை காக்கும் வகையில் அய்யங்கார் குளம் கிராம ஊராட்சி சார்பில் 3000 மரக்கன்றுகளை கொண்டு அடர்வனம் உருவாக்கும் நிகழ்வினை ஒன்றிய குழு தலைவர் துவக்கி வைத்தார்.

 

காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் எதிர்பாராத விதமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இயற்கை சூழல் மற்றும் பசுமை குறைவு காரணம் என அனைவரும் தற்போது இயற்கையை காக்க பல்வேறு மரங்களை நட்டு வானத்தை உருவாக்கி சூழலை வளப்படுத்த முயன்று வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் கிராம ஊராட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடவி கிணறு என அழைக்கப்படும் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வன பகுதியாக பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இதே கிராம ஊராட்சியில் உள்ள ஐந்து ஏக்கர் பரப்பளவில் இன்று 3000 மரக்கன்றுகளை மாவட்ட வனத்துறை மற்றும் ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் பெற்று நடவு செய்யும் பணி நடைபெற்றது.



 

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி மற்றும் துணைத் தலைவர் திவ்யபாரதி ஆகியோர் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தனர். இப்பகுதியில் புங்கன் நாவல் கொடுக்காப்புளி வேம்பு நீர்மருது மகாகனி உள்ளிட்ட பல்வேறு வகையான மர வகைகள் நடப்பட உள்ளது. இப்பகுதி அருகே நீர்நிலைகள் அதிகம் உள்ளதால் பறவை இனங்களும் அதிக அளவில் இப்பகுதியில் காணப்படுவதால், இதுபோன்ற அடர் வனப்பகுதி உருவாகும் நிலையில், இயற்கை வன விலங்குகள் பறவைகள் மற்றும் மனிதனுக்கு பெரும் நன்மை பயக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.



 

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் துணைத் தலைவர் திருநாவுக்கரசு ஒன்றிய குழு உறுப்பினர் அன்பு  , வனத்துறையை சார்ந்த கோபு மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.