காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நினைந்து சேதம். 

 


காஞ்சிபுரத்தில் மழை -  Kanchipuram Rain
  


காஞ்சிபுரம் ( Kanchipuram News ) :  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிகாலை முதல் மேகமூட்டங்களுடன் லேசான தூறல் மழை பெய்து வந்த நிலையில், வானில் தோன்றிய அழகிய வானவிலை வாகன ஓட்டிகள் ரசித்து சென்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்ட  பகுதிகளில் கோடை மழை சில நாட்களாக பெய்து வருகிறது.

 




 

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் லேசான தூறல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் உத்திரமேரூரில் எல். எண்டத்தூர் நெடுஞ்சாலையில் வானில் அழகிய இரண்டு வானவில் தோன்றியது. அதில், ஒன்று  மேகமூட்டங்களுக்கு இடையே மறைந்த நிலையில் மற்றொரு வானவில் பளிச் சென்று தெரிந்து, அதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரசித்தபடி சென்றனர்.



நெல் மூட்டைகள் 


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் ராமானுஜபுரம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு மதுரமங்கலம், சிவன் கூடல் , ஜம்போடை மேல் மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தனர். 

அதிகாரிகளின் அலட்சியம் 


தற்போது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நினைந்து சேதம் அடைந்துள்ளன. மழையில் நினைந்து சேதமான நெல்மணிகளில் முளைப்பு ஏற்பட்டால் வீணாகப் போய்விடும் என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதனால் அரசுக்கு பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறுகின்றனர்.



தார்பாய் வழங்கவில்லை


இதுகுறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு ராமானுஜபுரம் ஊராட்சியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்கு மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க தார்பாய் வழங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.  தொடர்ந்து இதுபோன்ற அலட்சிய சம்பவம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.  பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை முறையாக பாதுகாப்பதில்லை  விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.  இதுகுறித்து  விவசாயிகள் கூறுகையில் " நாங்கள் பல மாதங்கள் கஷ்டப்பட்டு,  கடன் பட்டு நாங்கள் பயிர் வைக்கும் பயிர்கள் வீணாகுவது எங்களால் பார்க்க முடியவில்லை " . அரசு  இதுபோன்று அலட்சியமாக செயல்படக் கூடாது" என தெரிவித்தனர்.




கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்:


கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு அறிவுறுத்தியுள்ளது. 


கனமழையால் சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர் உட்பட 20 ஆட்சியர்களுக்கு வருவாய், பேரிடர் மேலாண்மை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். 


இதில், கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும். கனமழையின்போது எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் ஆட்சியர்கள் உடனே பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தர வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.