தமிழ்நாட்டில் மே 18, 19, 20 தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


காஞ்சிபுரத்தில் மழை -  Kanchipuram Rain  


காஞ்சிபுரம் ( Kanchipuram News ) :  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிகாலை முதல் மேகமூட்டங்களுடன் லேசான தூறல் மழை பெய்து வந்த நிலையில், வானில் தோன்றிய அழகிய வானவிலை வாகன ஓட்டிகள் ரசித்து சென்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்ட  பகுதிகளில் கோடை மழை சில நாட்களாக பெய்து வருகிறது.



 

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே வானம் மேக மேகமூட்டத்துடன் லேசான தூறல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் உத்திரமேரூரில் எல். எண்டத்தூர் நெடுஞ்சாலையில் வானில் அழகிய இரண்டு  வானவில் தோன்றியது. அதில், ஒன்று  மேகமூட்டங்களுக்கு இடையே மறைந்த நிலையில் மற்றொரு வானவில் பளிச் சென்று தெரிந்து. அதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரசித்தபடி சென்றனர்.

 


செங்கல்பட்டு மாவட்ட நிலவரம்


செங்கல்பட்டு   முழுவதும் காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமான மழையும் பெய்து வருகிறது.  செங்கல்பட்டு,  மதுராந்தகம்,  செய்யூர்,  அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர்  உள்ளிட்ட பகுதிகளில் வாகனம் மேகமூட்டத்துடன் சில சமயங்களில் தூறல் மழை பெய்து வருகிறது.  இதேபோன்று கூடுவாஞ்சேரி மறைமலைநகர் ஆகிய பகுதிகளிலும் விட்டுவிட்டு அவப்பொழுது மழை பெய்து வருகிறது.


 





தமிழ்நாடு மழை நிலவரம் 


தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், அடுத்த 3 மணிநேரத்தில் திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை:


நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருமருகல், பரவை, சிக்கல், கீழ்வேளூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அதேபோல், சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார், கரிக்குளம், அம்மா சத்திரம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. 






அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சேலம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. 


கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்:


கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு அறிவுறுத்தியுள்ளது. 


கனமழையால் சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர் உட்பட 20 ஆட்சியர்களுக்கு வருவாய், பேரிடர் மேலாண்மை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். 


இதில், கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும். கனமழையின்போது எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் ஆட்சியர்கள் உடனே பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தர வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.