காஞ்சிபுரத்தில் வடகலை தென்கலை  சர்ச்சையை தொடர்ந்து காவல்துறையினர் இருதரப்பினரிடையே கயிறு கட்டி நடைபெற்ற பாராயனம்.


 


வடகலை -தென்கலை சர்ச்சை


கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் நடைபெறும் திருவிழாக்களின்பொழுது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் மோதலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நூற்றாண்டுகளாகவே, இந்த மோதல் போக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் காஞ்சிபுரம் உலக புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற முடிந்த பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது கூட, வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து இந்த மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் பக்தர்கள் தரப்பில் எழுந்திருந்தது.




 


காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில்


108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதனை ஒட்டி மாலையில் சுவாமி வீதி உலா புறப்பாடு உற்சவம் நடைபெற இருந்த நிலையில், சுவாமி முன்பு செல்வதில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே பிரச்சனை ஏற்படும் என்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை  அதிகாரிகள் விசாரித்து முடிவு செய்யலாம் என உத்தரவு இடப்பட்டிருந்தது.


 




அதன்படி இன்று மாலை  விளக்கொளி பெருமாள் கோயிலில் வீதி உலா நடைபெற உள்ள நிலையில் வடகலை தென்கலை பிரிவினர் வரவழைக்கப்பட்டு காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்பு சுவாமி முன்பு செல்வதற்கு குடவோலை முறையில் தீர்வு காணலாம் என முடிவு செய்யப்பட்டது.


 


குடவோலை முறை


அதன்படி வடகலை, தென்கலை, என எழுதப்பட்ட துண்டு சீட்டுகளை எழுதி சொம்பு ஒன்றில் போட்டு குலுக்கி கோவிலுக்கு வந்த குழந்தையை எடுக்க வைத்தனர். அதில் சுவாமி முன்பு முதலில்  வடகலை பிரிவினர்  செல்லலாம் என முடிவு வந்தது. இதனை இரு தரப்பினரும் முழு சம்மதத்துடன் ஏற்றுக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டனர்.




நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தாலும் சுவாமி முன்பு செல்வதற்கு பழமையான குடவோலை முறையில்  சுமூகமான தீர்வை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த முடிவானது தற்காலிக முடிவு என்பதும், இந்த சாமி ஊர் வீதி உலாவிற்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.


 


சலசலப்பும் இன்றி..


இந்நிலையில்  தற்போது சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இந்த முறை 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு வடகலை , தென்கலை இடையே கயிறு கட்டி இரு பிரிவினரையும் பிரித்த நிலையில் வடகலையினர் முதலில் பாராயணம் பாடினர். பின்னர் தென்கலையினர் பாடினர். அதன் பின்னர்  சுவாமி புறப்பாடு நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எந்த ஒரு சலசலப்பும் இன்றி வடகலை தென்கலை இடையே பாராயணம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது




வடகலை என்றால் என்ன ? தென்கலை என்றால் என்ன ?


இருவரும் வைணவர்கள் என்றாலும், ராமானுஜர் காலத்திற்குப் பிறகு வடகலை தென்கலை என இரு பிரிவுகள் ஏற்பட்டது. காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்ட ஆச்சார்யார்களைப் பின்பற்றுபவர்கள் வடகலை என்றும் ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்ட ஆச்சார்யார்களைப் பின்பற்றுவோர் தென்கலை எனப் பொதுவாக கூறுவார்கள்.





வேதாந்த தேசிகரை பின்பற்றுவோர் வடகலையார் எனவும் மணவாள மாமுனிகளைப் பின்பற்றுவோர் தென்கலையார் எனவும் கூறுவர்.வடகலை வைணவர்களுக்கும் தென்கலை வைணவர்களுக்கும் அடிப்படையில் 18 தத்துவ வேறுபாடுகள் இருக்கின்றன. இதேபோன்று இரண்டு பிரிவினருக்கு என தனி நாமம் உள்ளது.