சிவில் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ள காஞ்சிபுரம் சலவை தொழிலாளி மகன் பாலாஜி, நேர்மையாக வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், செயல்பாடுகள் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு கல்வியும் 


தமிழ்நாடு கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக இந்திய அளவில் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக பள்ளி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், மேல் படிப்பை தொடர்வதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் சாதாரண அரசு பள்ளிகளில் படித்தும், படிப்பை மட்டுமே நம்பி முன்னேறிய பல ஆளுமைகள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இதனால் தொடர்ந்து தமிழ்நாட்டில் கல்வி மூலமாக சாதனை மேற்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் நகரத்தில் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




விடாப்பிடியாக படித்த பாலாஜி


காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு தெருவில் வசிக்கும் சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளது காஞ்சிபுரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சலவை தொழிலாளியான கணேசன் - மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி சிறுவயதிலே படிப்பின் மீது ஆர்வம் உள்ள நபராக இருந்துள்ளார். காஞ்சிபுரத்தில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்த நிலையில், அதனை  தொடர்ந்து வழக்கறிஞராக வேண்டும் என எண்ணிய பாலாஜி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார்.




சாதித்துக் காட்டிய பாலாஜி


சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுகப்பிரியன் என்பவரிடம் பணிபுரிந்து வந்தார். குடும்ப நிலையை கருத்தில், கொண்டு அரசு சிவில் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் தன்னை தயார் செய்து கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வில் 12,500 பேர் தேர்வு எழுதிய நிலையில் இவர் தேர்ச்சி பெற்று நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி தேர்விலும் 472 நபர்களில் ஒன்றாக தேர்ச்சி பெற்றுள்ளார்.




சிவில் நீதிபதியாக தேர்ச்சி


அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 11ஆம் தேதி வெளியான முடிவுகளின்படி 237 நபர்களில், இவர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரது குடும்பம் மட்டும் உள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி அடைந்திருப்பது காஞ்சி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




நேர்மை மட்டுமே லட்சியம்


இதுகுறித்து பாலாஜி நம்மிடம் கூறுகையில், சீனியர் வழக்கறிஞர்கள் பலர் தனக்கு அறிவுரை வழங்கியதாகவும், அவர்களின் வழிகாட்டுதலுடன் படித்ததாகவும் தெரிவித்தார். தேர்வில் வெற்றி பெற நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் வரை படிப்பிற்காக செலவு செய்ததாக கூறுகிறார் பாலாஜி. நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து நம்மிடம் கூறுகையில், நாள்தோறும் 8 மணி நேரம் இத்தேர்விற்காக பயிற்சி மேற்கொண்ட நிலையில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தனது பனிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்கும் நிலையை கையாளுவேன். இளம் வழக்கறிஞர்கள் காவல் நிலையம் செல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகளை நேர்மையாக முடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என தெரிவிக்கிறார் நீதிபதி பாலாஜி.