காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நாளை காலை 9 மணி முதல் இரவு வரை பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் முடிந்து நடை சாற்றப்படும் எனக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்
சக்தி பீட ஸ்தலங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நாளை (07-09-25) ஞாயிற்றுக்கிழமை ஆதிசங்கரர் உப நிஷத் மடத்திற்கு எழுந்தருள்வதாலும், இரவு சந்திர கிரகணம் நடைபெறுவதையும் முன்னிட்டு காலை 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் முடிந்து நடை சாற்றப்படும்.
இதனைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் முதல் இரவு வரை பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய வரலாம் என நினைக்கும் பக்தர்கள் தங்கள் பயண திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளவும்,
மறுநாள் (08-09-25) திங்கட்கிழமை வழக்கம்போல் அதிகாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் ஸ்ரீ கார்யம் சுந்தரேசன் ஐயர் தெரிவித்துள்ளார்.
சந்திர கிரகணம்
சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். சூரியனின் கதிர்கள் பூமியில் விழும்போது, அதன் நிழல் நிலவின் மீது விண்வெளியில் விழுகிறது. சந்திரன் நிழலின் திட்டுக்குள் நுழையும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. மூன்று வகையான சந்திர கிரகணங்கள் உள்ளன. 1. முழு சந்திர கிரகணம் 2. பகுதி சந்திர கிரகணம் 3. புற நிழல் சந்திர கிரகணம்.
எங்கெல்லாம் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்?
ஆசியாவில் சில நாடுகள், குறிப்பாக இந்தியாவில் வட இந்தியா, தென் இந்தியாவில் சென்னை , கோவை, திருச்சி பெங்களூர் உட்பட பல பகுதிகளில் முழு சந்திர கிரகணத்தை பார்க்கலாம். இந்த முழு சந்திர கிரகணம், இந்திய நேரப்படி செப்.7 இரவு 9.58 க்கு ஆரம்பித்து செப்.8 அதிகாலை 1.26 க்கு முடிவடைகிறது. இது சுமார் 3மணி நேரம் 28 நிமிடங்கள் நீடிக்கிறது.இது மிக நீண்ட சந்திர கிரகணமாக அமையும் என்று கருதப்படுகிறது.
சந்திர கிரகணத்தை எப்படி காணலாம்?
இந்த சந்திர கிரகணத்தை தொலைநோக்கி, பைனாகுலர் அல்லது வெறும் கண்ணால் கூட நாம் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால் பார்வையாளர்கள் வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம். இதுபோன்ற இரவில் ஏற்படுகின்ற அரிய வானியல் நிகழ்வுகளை உற்று நோக்குவதன் மூலமாக பல வானியல் கருத்துக்களை குழந்தைகள் தெரிந்து கொள்ளமுடியும். இந்த அரிய நிகழ்வினை கண்டுகளிக்க மறந்து விடாதீர்கள். அடுத்த சந்திர கிரகணம் டிசம்பர் 2028-ல்தான் நிகழும் என்று உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.