காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலில் தமிழக அரசுக்கு விதி வழங்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், தமிழகத்தைத் தவிர கூட்டணி கட்சியின் உடைய மாநிலத்திற்கு அதிக நிதி வழங்கி இருப்பதை கண்டித்தும், பிரதமர் மோடி தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
காஞ்சிபுரம் திமுக ஆர்ப்பாட்டம்
இதனை கடித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழக அரசு பெற்றது ஜீரோ ரூபாய் என கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டே மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதேபோன்று மத்திய அரசுக்கு எதிரான, கோஷங்கள் அடங்கிய பதாகைகளையும் திமுகவினர் பிடித்திருந்தனர். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் எங்கே போனது ?, ஒன்றிய பட்ஜெட் நிதி தமிழ்நாட்டிற்கு நடந்த சதி, டெல்லியில் கிண்டிய அல்வாவை தமிழ்நாட்டுக்கு ஊட்டாதே ! உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தூக்கிப்பிடித்தவாறு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச் சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை.
மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் கழகத் தலைவர் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.