நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் தேசிய நெடுஞ்சாலையின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 1.3 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்கச்சாவடிகள்
இந்தியா முழுவதும் 1041 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 69 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. முதலில் சுங்க கட்டணங்கள் நேரடியாக பணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பணம் கொடுத்து விட்டு அதற்கான ரசீது வாங்கி, சுங்கச்சாவடி கடக்க அதிக அளவு நேரத்தை எடுத்துக் கொண்டது.
புதிய தீர்வு
இதனால் பயணம் நேரத்தை குறைக்கவும், சுங்கச்சாவடியில் வாகனங்கள் காத்திருப்பதை தடுக்கவும் அரசு சார்பில் பாஸ்ட் டேக் முறையை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறைந்திருக்கிறது. இருந்தும் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவு வாகனங்கள் வரும்போது கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் மூலம் சுங்கச்சாவடி கட்டணம்
செயற்கைக்கோள் அடிப்படையிலான gps மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை தொடங்கப்பட உள்ளது. 20 கிலோ மீட்டருக்கு முன்பாக இருந்தே செயற்கைக்கோள் மூலம் சுங்க கட்டணம் செலுத்த முடியும். தற்போது இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்பட உள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி..
நாடு முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் சோதனை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.